சென்னை- - மும்பை பலப்பரீட்சை * மூன்றாவது வெற்றி யாருக்கு
சென்னை- - மும்பை பலப்பரீட்சை * மூன்றாவது வெற்றி யாருக்கு
ADDED : ஏப் 22, 2026 11:09 PM

மும்பை: சென்னை, மும்பை அணிகள் மோதும் லீக் போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இதில் சாதித்து சென்னை அணி மூன்றாவது வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கிரிக்கெட் லீக் அரங்கில் ஐந்து முறை கோப்பை வென்ற அணிகள் சென்னை, மும்பை. இம்முறை இரு அணிகளும் துவக்கத்தில் இருந்தே தடுமாறுகின்றன. பங்கேற்ற 6 போட்டியில் தலா 2ல் மட்டும் வென்றன. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் இத்தொடரில் முதன் முறையாக பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை அணியில் பலர் காயத்தால் அவதிப்படுவது, ஏற்கனவே 'பார்ம்' இல்லாமல் தவிக்கும் கேப்டன் ருதுராஜுவுக்கு (6 போட்டி, 82 ரன்) சோகத்தை தந்துள்ளது. இந்நிலையில், அதிக ரன் எடுத்த ஆயுஷ் மாத்ரே (201 ரன், தொடை பின்பகுதி) விலகியது கூடுதல் பாதிப்பு. இவருக்குப் பதில், உள்ளூர் அரங்கில் திறமை வெளிப்படுத்திய உர்வில் படேல் இடம் பெறலாம்.
துவக்க வீரர் சஞ்சு சாம்சன் (6, 7, 9, 115, 48, 7) சீரற்ற பேட்டிங் ஏமாற்றம் தருகிறது. சர்பராஸ் கான் (147), ஷிவம் துபே (123), பிரவிஸ் (3ல் 41), போட்டியை சிறப்பாக 'பினிஷிங்' செய்தால் நல்லது.
பந்து வீச்சில் 'வேகப்புயல்' கலீல் அகமது (தொடை பகுதி) காயத்தால் விலகியது பின்னடைவு. இவருக்கு பதில் மற்றொரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் (ஆஸி.,) அறிமுக வாய்ப்பு பெறவுள்ளார். அதிக விக்கெட் சாய்த்த பவுலர் கம்போஜ் (13) மீண்டும் கைகொடுக்க வேண்டும். இவர்களுடன் ஓவர்டன் (8), நுார் அகமது (4) உதவலாம்.
பும்ரா நம்பிக்கை
மும்பை அணிக்கு நமன் திர் (154 ரன்), கடந்த போட்டியில் சதம் விளாசிய திலக் வர்மா (144), ரிக்கிள்டன் (137), சதம் அடித்த குயின்டன் டி காக் (125) என பலரும் பேட்டிங்கில் நம்பிக்கை தர காத்திருக்கின்றனர். அனுபவ ரோகித் சர்மா (137) இல்லாத நிலையில், கடந்த போட்டியில் வென்றது, கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு (96) நம்பிக்கை தந்துள்ளது.
முதல் 5 போட்டியில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத பும்ரா (6ல் 1 விக்.,), கடந்த முறை முதல் பந்தில் விக்கெட் சாய்த்த உற்சாகத்தில் உள்ளார். தவிர ஷர்துல் தாகூர் (6), கசன்பர் (6) பலம் சேர்க்கின்றனர்.
வருவாரா தோனி
கால் தசை பிடிப்பு காரணமாக, முதல் 6 போட்டியில் 'சீனியர்' தோனி களமிறங்கவில்லை. ஆனால், மும்பையில் கடந்த சில நாட்களாக தோனி தீவிர பேட்டிங், விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். ஒருவேளை தோனி அணிக்கு திரும்பினால், சர்பராஸ் கான் வழிவிடலாம்.
இதுகுறித்து சென்னை அணி பவுலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் கூறுகையில், ''தோனி பங்கேற்பது குறித்து, மருத்துவ குழுவின் முடிவுக்கு ஏற்ப, கடைசி நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும்,'' என்றார். இதுபோல, மும்பை அணியின் ரோகித் சர்மா விளையாடுவது குறித்து, போட்டி துவங்கும் முன் தான் தெரியவரும்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 39 போட்டியில் மோதின. இதில் சென்னை 18, மும்பை 21ல் வென்றன. கடைசியாக மோதிய 5 போட்டியில் சென்னை 4, மும்பை 1ல் வென்றன.
இஷான் தொடரட்டும்
ஐதராபாத் அணி கேப்டன் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ். முதுகுப்பகுதி காயத்தால் லீக் தொடரில் இதுவரை பங்கேற்கவில்லை. இவருக்கு பதில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷான் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 7 போட்டியில் ஐதராபாத் அணி 4ல் (3 தோல்வி) வென்றுள்ளது.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறுகையில்,'' கம்மின்ஸ் அணிக்கு திரும்பினாலும், இஷான் கேப்டனாக தொடர வேண்டும். 2024ல் அணியை கம்மின்ஸ் பைனலுக்கு கொண்டு சென்றார். எனினும், கடந்த 7 போட்டியில் இளம் கேப்டன் இஷான் சிறப்பாக செயல்பட்டுள்ளார். பவுலர்கள், மற்ற வீரர்களுக்கு இடையே நல்ல பிணைப்பு உருவாகி உள்ளது. இது தொடர வேண்டும்,'' என்றார்.
