ADDED : நவ 15, 2025 11:18 PM

மும்பை: சென்னை அணி 'ஆல் ரவுண்டர்' ஜடேஜா, ராஜஸ்தான் அணியில் இணைந்தார்.
இந்தியாவில் பிரிமியர் தொடரின் 19வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் 'மினி' ஏலம் டிச. 16ல் அபுதாபியில் நடக்க உள்ளது. முன்னதாக ஒவ்வொரு அணியிலும் 'டிரேடிங்' செய்த வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் குறித்த இறுதி விபரம் நேற்று வெளியானது.
இதன் படி, சென்னை அணி, சுழற்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டர்' ஜடேஜா 36, சாம் கர்ரான் என இருவரை 'டிரேடிங்' முறையில் ராஜஸ்தானுக்கு கொடுத்து, அந்த அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனை, ரூ. 18 கோடிக்கு வாங்கியுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தியில்,'' கடந்த 12 சீசனாக சென்னை அணிக்காக விளையாடிய ஜடேஜா, ரூ. 4 கோடி குறைவான விலையில், ரூ. 14 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இணைந்தார். இதற்குப் பதில் சாம்சனை சென்னை அணி வாங்கியது. இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் சாம் கர்ரானும் (ரூ. 2.4 கோடி) ராஜஸ்தான் அணிக்கு சென்றார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, ரச்சின் ரவிந்திரா, கான்வே, விஜய் சங்கர், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரானா, தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி உட்பட 11 வீரர்களை சென்னை அணி விடுவித்தது. வரும் ஏலத்தில் ரூ. 43.5 கோடி கையிருப்புடன் சென்னை அணி பங்கேற்கும்.
ஐதராபாத் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரூ. 10 கோடிக்கு லக்னோ அணியில் இணைந்தார். கோல்கட்டா அணி 'ஆல் ரவுண்டர்' ஆன்ட்ரி ரசல், விடுவிக்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் (ரூ. 10.75 கோடி, தமிழகம்), டில்லி அணியில் நீடிக்கிறார்.

