'ஹாட்ரிக்' கனவில் சென்னை... * இன்று லக்னோ அணியுடன் மோதல்
'ஹாட்ரிக்' கனவில் சென்னை... * இன்று லக்னோ அணியுடன் மோதல்
ADDED : மே 09, 2026 11:32 PM

சென்னை: சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் (பகலிரவு) சென்னை, லக்னோ அணிகள் மோதுகின்றன.
சென்னை அணிக்கு 'சேட்டன்' சஞ்சு சாம்சன் பலம் சேர்க்கிறார். கடந்த போட்டியில், டில்லிக்கு எதிராக 52 பந்தில் 87 ரன் விளாசி, வெற்றி தேடித்தந்தார். 402 ரன் (10 போட்டி) குவித்து அருமையான 'பார்மில்' உள்ளார். கேப்டன் ருதுராஜ், 251 ரன் எடுத்துள்ளார். இருவரும் வலுவான துவக்கம் தர வேண்டும். 'மிடில் ஆர்டரில்' உர்வில் படேல், பிரவிஸ், கார்த்திக் சர்மா, ஓவர்டன் அசத்தலாம். கடைசி கட்ட அதிரடிக்கு ஷிவம் துபே உள்ளார். கால் தசை பிடிப்பால் அவதிப்படும் தோனி மீண்டு வருகிறார். பயிற்சியில் பங்கேற்கும் இவர், விளையாடும் 'லெவனில்' இடம் பெறுவது சந்தேகம்.
கம்போஜ் கலக்கல்
சேப்பாக்கம் ஆடுகளத்தில் நுார் அகமது, அகீல் ஹூசைன் 'சுழல்' ஜாலம் நிகழ்த்தலாம். 'வேகத்தில்' மிரட்ட கம்போஜ் (17 விக்கெட், 10 போட்டி), ஓவர்டன், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங் உள்ளனர். கடந்த இரு போட்டியில் மும்பை, டில்லியை சாய்த்த சென்னை, இன்றும் அசத்தினால், 'ஹாட்ரிக்' வெற்றி பெறலாம். தவிர, 'பிளே-ஆப்' வாய்ப்பை தக்க வைக்கலாம்.
தேறாத ரிஷாப்
லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்று தோற்றால், 'பிளே-ஆப்' வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழக்க நேரிடும். பெங்களூருவுக்கு எதிரான கடந்த போட்டியில் சதம் விளாசிய மிட்சல் மார்ஷ், வெற்றிக்கு வித்திட்டார். மார்ஷ் (367 ரன், 10 போட்டி) கைகொடுத்த போதும், மற்ற பேட்டர்கள் ஏமாற்றுகின்றனர். ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட 'காஸ்ட்லி' கேப்டன் ரிஷாப் பன்ட், பூரன், மார்க்ரம் சோபிக்க தவறுவது பலவீனம்.
'வேகத்தில்' அனுபவ ஷமி, பிரின்ஸ் யாதவ் (16 விக்கெட், 10 போட்டி) கைகொடுக்கலாம். 'சுழலில்' அசத்த ஷாபாஸ் அகமது, திக்வேஷ் சிங் ரதி உள்ளனர்.
யார் ஆதிக்கம்
இரு அணிகளும் 6 போட்டிகளில் மோதின. சென்னை 2, லக்னோ 3ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது. 'ஸ்பின்னர்'களுக்கும் கைகொடுக்கும்.
* சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை.
'லக்கி' சாம்சன்
இந்திய 'டி-20' அணியின் கேப்டனாக 'கீப்பர்-பேட்டர்' சஞ்சு சாம்சன், 31, விரைவில் நியமிக்கப்படலாம். சமீபத்தில் இந்தியா, 'டி-20' உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். தற்போதைய கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை அணிக்காக அசத்துகிறார். அதே நேரம் இந்திய 'டி-20' கேப்டனான சூர்யகுமார், 35, மும்பை அணிக்காக (195 ரன், 10 போட்டி) சோபிக்கவில்லை. இவருக்கு பதிலாக, வரும் ஜூனில் நடக்க உள்ள அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரில் புதிய கேப்டனை நியமிக்க தேர்வுக்குழு தலைவர் அகார்கர், பயிற்சியாளர் காம்பிர் திட்டமிட்டுள்ளனர். ஷ்ரேயஸ் ஐயர் பெயர் முதலில் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இவர் இந்திய அணிக்காக 'டி-20' போட்டியில் விளையாடி நீண்ட காலமாகிறது. கடைசியாக 2023, டிசம்பரில் பங்கேற்றார். சாம்சன் சமீப காலமாக அசத்தி வருகிறார். இதன் அடிப்படையில் கேப்டன் பதவி வழங்கப்படலாம்.
