சென்னை அணி வலுவான 'கம்பேக்' * கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை
சென்னை அணி வலுவான 'கம்பேக்' * கேப்டன் ருதுராஜ் நம்பிக்கை
ADDED : செப் 01, 2026 11:05 PM

கோவை: ''தோனியிடம் இருந்து சென்னை அணி கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பது மிகப்பெரிய உழைப்பைக் கோருகிறது. அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு, பொறுப்பாக செயல்பட்டு வருகிறேன்,'' என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம், சென்னை கேப்டன் ருதுராஜ் கூறியதாவது:
கேப்டனாக தொடர்ந்து புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். வெற்றி, தோல்வி என இரண்டிலும் கிடைக்கும் அனுபவங்கள் எனக்கும், அணியினருக்கும் உதவியாக இருக்கும். தோனி மிகவும் வெற்றிகரமான கேப்டன் என்பதால், அவருக்குப் பிறகு பொறுப்பேற்றுள்ள என்னிடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது இயல்புதான். அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறேன்.
கடந்த சீசனில் சென்னை அணியின் செயல்பாடு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம். இருப்பினும், அடுத்த சீசனில் வலுவான 'கம்பேக்' கொடுப்போம். சென்னை அணியுடன் ரசிகர்கள் பல வெற்றிகளையும், சிறப்பான தருணங்களையும் கொண்டாடியுள்ளனர். அதேபோல், அணியின் கடினமான காலகட்டங்களிலும் ஆதரவு அளிக்க வேண்டும்.
நான் விளையாடாத நேரங்களில் உலகத்கோப்பை உட்பட பொதுவாக எந்த போட்டிகளையும் நான் அதிகம் பார்ப்பதில்லை. இந்திய அணிக்கு ஆதரவு அளிக்க விரும்பினாலும், தற்போது பயிற்சி மற்றும் உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ரஞ்சி, துலீப் டிராபி, சர்வதேச போட்டிகள், ஐ.பி.எல்., என, ஒரே ஆண்டில் பல தொடர்கள் உள்ளன. அனைத்தையும் ஒரே நேரத்தில் நினைத்தால் சிரமமாகிவிடும். நிகழ்காலத்தில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு போட்டியையும் அனுபவித்து விளையாட விரும்புகிறேன்.
அடுத்த சீசனில் அணியில் தொடர்வது தொடர்பாக ரசிகர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதுவே எனது முடிவாக இருக்கும். 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் உற்சாகமளிக்கும் வகையில் உள்ளது.
இவ்வாறு, ருதுராஜ் தெரிவித்தார்.
