சென்னை அணி சரிந்தது ஏன்... * தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏமாற்றம்
சென்னை அணி சரிந்தது ஏன்... * தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏமாற்றம்
ADDED : மே 22, 2026 11:17 PM

சென்னை: முன்னணி வீரர்கள் காயம், திறனற்ற பவுலிங், முக்கிய பேட்டர்கள் தடுமாற்றம் என அனைத்தும் ஒன்று சேர, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, 'பிளே ஆப்' செல்ல முடியாமல் வெளியேறியது சென்னை அணி.
கிரிக்கெட் லீக் அரங்கில் ஐந்து முறை கோப்பை வென்றது சென்னை அணி. கடைசியாக 2023ல் தோனி தலைமையில் சாம்பியன் ஆனது. பின் 2024ல் ருதுராஜ் (5வது இடம்), 2025ல் ருதுராஜ், தோனி (10 வது இடம்) என அடுத்தடுத்து கேப்டன்கள் மாறினர். இம்முறை மீண்டும் ருதுராஜ் தொடர்ந்தார்.
ஏலத்தில் தவறு
தோனிக்கு 44 வயதான நிலையில் சென்னை அணி, புதிதாக கட்டமைக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால் அனுபவ வீரர்களை தேர்வு செய்யத் தவறியது.
ஏலத்தில் ராகுலை ரூ. 13.5 கோடி வரை கேட்டது. மாறாக, கூடுதலாக 50 லட்சம் கொடுத்து டில்லி அணி ராகுலை (ரூ. 14 கோடி) தட்டிச் சென்றது. ஆனால் சர்வதேச அனுபவம் இல்லாத கார்த்திக் சர்மாவை ரூ.14.20 கோடிக்கு சென்னை வாங்கியது.
காயம் தொல்லை
கலீல் அகமது (5 போட்டி), 'ஆல் ரவுண்டர்' ஓவர்டன் (136 ரன், 14 விக்.,), ராமகிருஷ்ணா காயத்தால் கிளம்பினர். ஆயுஷ் மாத்ரே (201 ரன்) 6 போட்டியுடன் தொடை பகுதி காயத்தால் விலகியது பெரும் பாதிப்பு தந்தது. காயத்தால் தோனி, நாதன் எல்லிஸ் கடைசி வரை ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.
திணறிய இளமை
கடைசியில் 20க்கும் குறைவான போட்டிகளில் பங்கேற்ற அனுபவமற்ற 8க்கும் மேற்பட்ட வீரர்களை வைத்து சமாளித்தது சென்னை. நெருக்கடியான சூழலில் இளம் வீரர்களால் தடுமாறியது. கார்த்திக் (295 ரன்), உர்வில் படேல் (129), பிரஷாந்த் வீர் (90) சீரற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தினர். பிரவிஸ் (151), ஷிவம் துபே (270) கைவிட, பல போட்டியில் 'பினிஷிங்' இல்லாமல் தத்தளித்தது சென்னை.
பேட்டிங் ஏமாற்றம்
நவீன 'டி-20'க்கு ஏற்ப சென்னை அணியின் துவக்கம் அமையவில்லை. கேப்டன் ருதுராஜ் (337 ரன், 273 பந்து) அதிக பந்துகளை வீணடித்தார். சரியான நேரத்தில், துல்லிய முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறார். துவக்கத்தில் சஞ்சு சாம்சன் (477) மட்டும் ஆறுதல் தந்தார்.
பவுலிங் மோசம்
கடைசி நேரத்தில் துல்லியமாக வீச முடியாமல் தவித்தது சென்னை அணியின் பவுலிங் படை. வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். ஒட்டுமொத்தமாக அணி சோபிக்கவில்லை. கேப்டன் ருதுராஜ், பயிற்சியாளர் பிளமிங் உட்பட பலருக்கும் 'கல்தா' கொடுக்க வேண்டும். புதிய கேப்டனாக சாம்சனை நியமிக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
இளமை மட்டும் போதுமா
இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 39, கூறுகையில்,'' சென்னை அணி, ஏலத்தில் உலகத் தரம் வாய்ந்த வீரர்களை வாங்கி, சிறந்த அணியை உருவாக்க வேண்டும். 'வேகம்', 'சுழல்' என இரண்டிலும் திறமையான பவுலர்களை அணிக்கு கொண்டு வர வேண்டும். இளம் வீரர்கள் அணிக்கு தேவை தான். அதேநேரம், அனுபவம்+இளமை சேரும் போது வலிமையான அணியாக மாறும்,'' என்றார்.
