தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இளம் வைபவ் சதம் வீண் * ராஜஸ்தான் அணி ஏமாற்றம்

இளம் வைபவ் சதம் வீண் * ராஜஸ்தான் அணி ஏமாற்றம்

இளம் வைபவ் சதம் வீண் * ராஜஸ்தான் அணி ஏமாற்றம்


ADDED : ஏப் 25, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்ப்பூர்: ஐதராபாத்துக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டில் தோல்வியடைந்தது. 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் வீணானது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. முதுகுப்பகுதி காயத்தில் இருந்து மீண்ட கம்மின்ஸ், நடப்பு தொடரில் முதல் முறையாக ஐதராபாத் அணிக்கு கேப்டனாக களமிறங்கினார். 'டாஸ்' வென்ற இவர், பீல்டிங் தேர்வு செய்தார்.

ஜுரெல் அரைசதம்

ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 2.2 ஓவரில் 36 ரன் சேர்த்த போது, ஈஷான் மலிங்கா பந்தில் அவுட்டானார் ஜெய்ஸ்வால் (10). மலிங்கா ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்த வைபவ், 15 பந்தில் 50 ரன்களை கடந்தார்.

நிதிஷ் குமார் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜுரெல், 34 பந்தில் அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்த போது, ஜுரெல் (51) அவுட்டானார்.

வைபவ் மிரட்டல்

போட்டியின் 14வது ஓவரை வீசினார் சாகிப். 2, 3வது பந்தில் 6, 4 என அடித்த வைபவ், 5வது பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். 36 பந்தில், கிரிக்கெட் லீக் அரங்கில் 2வது சதம் கடந்தார். 37 பந்தில் இவர் 103 ரன் எடுத்து, சாகிப் பந்தில் அவுட்டானர். ரியான் பராக் (9) ஏமாற்றினார். சாகிப் வீசிய 18 வது ஓவரில் 18 ரன் எடுக்கப்பட்டன. பெரேரா (33) கைகொடுக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 228/6 ரன் எடுத்தது.

'இருவர்' அபாரம்

ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் (6), அபிஷேக் ஜோடி துவக்கம் தந்தது. அபிஷேக் (24 பந்து) இத்தொடரில் 4வது அரைசதம் அடித்தார். இவருக்கு 'கம்பெனி' கொடுத்த இஷான் கிஷான் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது, அபிஷேக் (57) அவுட்டானார். அடுத்த சிறிது நேரத்தில் இஷான் (74) அவுட்டானார். கிளாசன் (29), நிதிஷ் குமார் (36) அவுட்டான போதும், ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 229/5 ரன் எடுத்து 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

அதிவேக '1000'

நேற்று 45 ரன் எடுத்த போது, 'டி-20' அரங்கில் 1000 ரன் எடுத்த இளம் வீரர் என புதிய சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி (15 ஆண்டு, 29 நாள்).

* இந்த மைல்கல்லை குறைந்த பந்தில் எட்டிய இந்திய வீரர்களில் அபிஷேக்கை (528) முந்தி, முதலிடம் பெற்றார் வைபவ் (473 பந்து). சர்வதேச அளவில் வைபவ், மிட்சல் ஓவனை (533) பின் தள்ளினார்.

* 'டி-20' அரங்கில் குறைந்த இன்னிங்சில் 1000 ரன் எடுத்த இந்திய வீரர்களில் கோலியை (27) முந்தி, முதலிடம் பிடித்தார் வைபவ் (26 இன்னிங்ஸ்).

மூன்றாவது இடம்

கிரிக்கெட் லீக் அரங்கில் அதிவேகமாக சதம் அடித்த வீரர்களில் கெய்ல் (30 பந்து, 2013)) முதலிடத்தில் உள்ளார். 2, 3வது இடத்தில் வைபவ் உள்ளார். இவர் 2025ல் 35, தற்போது 36 பந்தில் சதம் அடித்தார். யூசுப் பதான் (37, 2010) அடுத்து உள்ளார்.

நான்கு சதம்

'டி-20' அரங்கில் இதுவரை 4 சதம் அடித்துள்ளார் வைபவ். இதையடுத்து முதல் 4 சதத்தை, குறைந்த இன்னிங்சில் எட்டியவர்களில் முதலிடம் பெற்றார் வைபவ் (26 இன்னிங்ஸ்). உஸ்மான் கான் (33), சாய் சுதர்சன் (72), கெய்ல் (77) அடுத்தடுத்து உள்ளனர்.

ஐந்தாவது வீரர்

'டி-20' அரங்கில் 40 க்கும் குறைவான பந்துகளில், குறைந்தது இரு முறை சதம் அடித்த வீரர்களில் வைபவ் (35, 36 பந்து), ஐந்தாவது இடம் பெற்றார். முதலிடத்தில் உர்வில் படேல் (28, 31, 36 பந்து) உள்ளார். அடுத்த 3 இடத்தில் அபிஷேக் சர்மா (28, 32, 37), பின் ஆலன் (33, 34), டேவிட் மில்லர் (35, 38) உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us