குஜராத் அணி அசத்தல் வெற்றி * சுப்மன், சுதர்சன் அரைசதம் விளாசல்
குஜராத் அணி அசத்தல் வெற்றி * சுப்மன், சுதர்சன் அரைசதம் விளாசல்
ADDED : மே 09, 2026 11:33 PM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் அணி, 77 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணி கேப்டன் ஜெய்ஸ்வால், 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
சுதர்சன் அரைசதம்
குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஆர்ச்சர் வீசிய முதல் பந்தில் சுதர்சன் பவுண்டரி அடித்தார். ஆர்ச்சர் வீசிய 5வது ஓவரில் சுப்மன், 4, 6, 4 என அடிக்க மொத்தம் 15 ரன் கிடைத்தன. குஜராத் அணியின் ஸ்கோர், 8.1 ஓவரில் 100 ரன்களை (102/0) கடந்தது. சுதர்சன் 30 பந்தில் அரைசதம் கடந்தார்.
சுப்மன் விளாசல்
முதல் விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்த நிலையில், யாஷ் ராஜ் பந்தில் சுதர்சன் (54) அவுட்டானார். மறுபக்கம் சுப்மன் கில் 44 பந்தில் 84 ரன் எடுத்து, பிரிஜேஷ் சர்மா பந்தில் வீழ்ந்தார். ஹோல்டர் (7) நிலைக்கவில்லை. தேஷ்பாண்டே கடைசி ஓவரை வீசினார். இதில் டிவாட்யா 2, வாஷிங்டன் சுந்தர் 1 என மூன்று சிக்சர் அடிக்கப்பட, 21 ரன் கிடைத்தன.
குஜராத் அணி 20 ஓவரில் 229/4 ரன் குவித்தது. வாஷிங்டன் 37), டிவாட்யா (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
ரஷித் அபாரம்
ராஜஸ்தான் அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் ஜோடி துவக்கம் தந்தது. சிராஜ் வீசிய முதல் பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுத்தார். அடுத்த வந்த வைபவ், தான் சந்தித்த முதல் பந்தில் சிக்சர் அடித்தார். அடுத்த பந்து இவரது இடது கணுக்காலில் தாக்க, வலியால் துடித்தார்.
மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்த வைபவ், ரபாடா, சிராஜ் பந்துகளில் சிக்சர் அடித்தார். இவர், 16 பந்தில் 36 ரன் எடுத்து, சிராஜ் பந்தில் அவுட்டானார். ஜெய்ஸ்வால் (3) நிலைக்கவில்லை. துருவ் ஜுரெல் (24) ஆறுதல் தந்தார். ஹெட்மயர் (7), பெரேய்ரா (5), ஷுபம் துபே (15) கைவிட்டனர். ஜடேஜா 38 ரன் எடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற, ராஜஸ்தான் அணி 16.3 ஓவரில் 152 ரன்னில் ஆல் அவுட்டாகி தோற்றது. ரஷித் கான் 4, ஹோல்டர் 3 விக்கெட் சாய்த்தனர்.
இளம் வயதில் '100'
நேற்று சிராஜ் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் வைபவ். இதையடுத்து 'டி-20' அரங்கில் இளம் வயதில் 100 சிக்சர் (29 போட்டி) அடித்த முதல் வீரர் ஆனார் வைபவ் (15 ஆண்டு, 43 நாள்). சயிம் அயுப் (21 ஆண்டு, 297 நாள், பாக்.,) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஒவ்வொரு சிக்சருக்கும்...
இந்தியாவின் கிராமப்புற பெண்கள் வளர்ச்சிக்கு உதவ, சூரிய சக்தி ('சோலார் எனர்ஜி) முறையை பிரபலப்படுத்தவும், நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பில், 'பிங்க்' பிராமிஸ்' தரப்பட்டது. இதன் படி, இப்போட்டியில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு சிக்சருக்கும், தலா 6 வீடுகளுக்கு 'சோலார்' மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட உள்ளது.
9 வது முறை
லீக் அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்னுக்கும் மேல் சேர்த்த வரிசையில் சுப்மன் கில்-சாய் சுதர்சன் ஜோடி, முதலிடத்தை ஐதராபாத்தின் வார்னர்-ஷிகர் தவான், அபிஷேக்-ஹெட் ஜோடியுடன் பகிர்ந்து கொண்டது. மூன்று ஜோடியும் 6 முறை இதுபோல ரன் எடுத்தது.
* எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகமுறை 100 ரன்னுக்கும் மேல் எடுத்த ஜோடி வரிசையில், சுப்மன் கில்-சாய் சுதர்சன் இணைந்து, 2வது இடத்தை கோலி-கெய்லுடன் (பெங்களூரு) பகிர்ந்து கொண்டனர். இரு ஜோடியும் 9 முறை இதுபோல ரன் சேர்த்தது. முதலிடத்தில் கோலி-டிவிலியர்ஸ் (10 முறை, பெங்களூரு) ஜோடி உள்ளது.
82 ரன்
குஜராத் அணி நேற்று 6 ஓவரில் 82/0 ரன் எடுத்தது. லீக் அரங்கில் 'பவர் பிளே' ஓவர்களில், குஜராத் அணி இரண்டாவது முறையாக தனது அதிகபட்ச ரன் எடுத்தது. முன்னதாக 2025ல் ஐதராபாத்துடன் 82/0 ரன் எடுத்திருந்தது. லக்னோவுக்கு எதிராக எடுத்த 78/0 ரன்(2023) மூன்றாவது இடத்தில் உள்ளது.
'பாக்கெட்' கொண்டாட்டம்
நடப்பு தொடரில் ராஜஸ்தான் 'ஆல் ரவுண்டர்' ஜடேஜா, 'பாக்கெட்' கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார். நேற்று பட்லரை அவுட்டாக்கியதும், தனது வலது 'பேன்ட் பாக்கெட்', உள்ளே ஏதோ போடுவது போல 'சைகை' செய்து, லேசாக தட்டினார். அதாவது அவுட்டான பேட்டர், 'தனது பையில் உள்ளார்,' என்பதை குறிக்கும் வகையில் இப்படிச் செய்கிறார்.
