ADDED : செப் 24, 2024 10:51 PM

புதுடில்லி: ஈரானி கோப்பை போட்டிக்கான ரெஸ்ட் ஆப் இந்திய அணிக்கு ருதுராஜ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ஈரானி கோப்பை முதல் தர போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த 61 போட்டிகளில் ரெஸ்ட் ஆப் இந்தியா 30 முறை கோப்பை வென்றது. மும்பை (14), கர்நாடகா (6) அடுத்து உள்ளன.
இதன் 62 வது போட்டி அக். 1-5ல் லக்னோவில் நடக்க உள்ளது. ரஞ்சி கோப்பை சாம்பியன் மும்பையுடன், 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி மோத உள்ளது. நேற்று ரெஸ்ட் ஆப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டது.
கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார். அபிமன்யு ஈஸ்வரன் துணைக்கேப்டனாக செயல்பட உள்ளார். சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல். துருவ் ஜுரல், இஷான் கிஷான், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், கலீல் அகமதுவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை.
இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்ட அறிக்கையில்,' வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்டில் களமிறங்க வாய்ப்பு இல்லை என்பதால் துருவ் ஜுரல், யாஷ் தயாள் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் சேர்க்கப்பட்டனர். இதேபோல, இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படும் சர்பராஸ், மும்பை அணிக்காக களமிறங்குவார்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
