தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/எந்திரமா... யாரோ செய்யும் மந்திரமா: லட்சுமண் காட்டம்

எந்திரமா... யாரோ செய்யும் மந்திரமா: லட்சுமண் காட்டம்

எந்திரமா... யாரோ செய்யும் மந்திரமா: லட்சுமண் காட்டம்


ADDED : ஆக 09, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''காயத்தில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் துல்லியமாக மீள, வீரர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல'' என லட்சுமண் தெரிவித்தார்.

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 'வேகப்புயல்' பும்ரா (இடது முழங்கால் வீக்கம்), தமிழக பேட்டர் சாய் சுதர்சன் (வலது கால் பெருவிரலில் வலி) உடற்தகுதியில் தேறாததால், விலகினர். பெங்களூருவில் உள்ள, பி.சி.சி.ஐ., உயர்திறன் மையத்தில், மீண்டு வருவதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீரர்கள் முழுமையாக குணமடைவதற்கு முன்பே, 'பிட்னஸ்' சான்றிதழ் அளிப்பதாக, இந்த மையத்தினர் மீது தேர்வுக்குழுவினர் அதிருப்தி தெரிவித்தனர்.

இது தொடர்பாக பெங்களூருவில், பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா, உயர்திறன் மைய தலைவர் லட்சுமணை சந்தித்து பேசினார்.

பின் லட்சுமண் அளித்த பேட்டி: வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு மட்டுமல்ல, கிரிக்கெட் அரங்கில் சிறப்பாக செயல்படவும் உயர்திறன் மையம் உதவுகிறது. காயம் தொடர்பாக, பழி சுமத்த விரும்பவில்லை. அப்படி செய்தால், யாரையாவது பலிகடாவாக்க நேரிடும். எங்களது மையம், தேர்வுக்குழுவினர் இடையே நல்ல புரிதல் உள்ளது. ஒவ்வொரு வீரரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார். இவர்களது 'பிட்னஸ்' குறித்து தேர்வுக்குழுவினருக்கு (ஆண்கள், பெண்கள்) அவ்வப்போது தகவல் கொடுக்கிறோம். எதிர்பார்ப்பின் அடிப்படையில் தான், வீரர்கள் குணமடைவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது. துல்லியமான காலத்தில் மீண்டு வர இயந்திரம் கிடையாது; அவர்களும் மனிதர்கள் தான்.

முன்னேற்றம் இல்லை: பும்ரா, சுதர்சன் தேர்வு செய்யப்பட்ட போது, அவர்களது பெயருக்கு அருகே நட்சத்திர குறியீடு இடம் பெற்றிருந்தது. இதற்கு 'உடற்தகுதி அடிப்படையில்' வாய்ப்பு என்று அர்த்தம். இவர்களது உடல்நிலையை ஒவ்வொரு கட்டமாக கவனித்தோம். எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை என்பதை தேர்வுக்குழு தலைவர், பயிற்சியாளருக்கு தெரிவித்தோம். அவர்களும், சர்வதேச தொடருக்கு இருவரும் தயாராகவில்லை என்பதை புரிந்து கொண்டனர்.

நிறைய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை. எங்களது மையத்தில் உள்ள ஆட்ரியன், நிக், கமலேஷ் உள்ளிட்ட உடற்தகுதி நிபுணர்கள், வீரர்களின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அனைத்து சோதனைகளிலும் தேறினால் மட்டுமே 'பிட்னஸ்' சான்றிதழ் வழங்குவர். இந்திய அணிக்கு ஒருவர் திரும்பும் போது, முதல் போட்டியில் இருந்தே முழு உடற்தகுதியுடன் விளையாட வேண்டும் என்பதே எங்களது இலக்கு.

இவ்வாறு லட்சுமண் கூறினார்.

உடற்தகுதி முக்கியம்

பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா கூறுகையில்,''இந்திய அணி வெளிநாடு புறப்படுவதற்கு 2 அல்லது 3 வாரங்களுக்கு முன் தேர்வுக்குழு கூட்டம் நடக்கும். அப்போது ஒரு வீரரின் உடல்நிலை பற்றி துல்லியமாக தெரியாது. அதனால் தான் உடற்தகுதியை பொறுத்து என்ற நிபந்தனையுடன் சேர்க்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் அந்த வீரர் உடற்தகுதியில் தேறினால், இடம் பெறுவார். 'பிட்னஸ்' இல்லாத பட்சத்தில் நீக்கப்படுவார்,''என்றார்.

அலட்சியம் சரியா

பெங்களூரு, உயர்திறன் மையத்தில், கடந்த 18 மாதங்களாக விளையாட்டு அறிவியல், மருத்துவ பிரிவு தலைவர் பதவி காலியாக உள்ளது. முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படும் நிலையில், இவ்விஷயத்தில் பி.சி.சி.ஐ., அலட்சியமாக இருக்கிறது.

இது பற்றி லட்சுமண் கூறுகையில்,''இப்பதவியில் இருந்து நிதின் படேல் விலகிய நிலையில், சீனியர் 'பிசியோதெரபிஸ்ட்' தனஞ்செய் கவுஷிக் இடைக்கால நிபுணராக பணியாற்றி வருகிறார். ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ லெய்பசை தேர்வு செய்தோம். பெங்களூருவில் நிரந்தரமாக தங்க முடியாது என நிராகரித்துவிட்டார். விரைவில் தகுதியான நபர் நியமிக்கப்படுவார்,''என்றார்.

இலக்கு என்ன

இந்திய தேர்வுக்குழு தலைவர் அகார்கரின் பதவிக்காலம் வரும் செப்டம்பரில் நிறைவடைகிறது. இதற்கு பின் இப்பதவிக்கு லட்சுமண் நியமிக்கப்படலாம். இதில் ஆர்வம் காட்டாத லட்சுமண் கூறுகையில்,''2024ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க மறுத்தேன். பெங்களூரு உயர் திறன் மையத்தை மேம்படுத்துவதே எனது இலக்கு. இங்கிருந்து நிறைய இளம் வீரர்கள் உருவாக வேண்டும். இவர்கள் அசத்தும் பட்சத்தில், உலகின் சிறந்த அணியாக இந்தியா திகழும்,''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us