UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 08:46 PM

புதுடில்லி: ‘‘ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்படாததால், ஜெய்ஸ்வாலின் தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம்,’’ என, இந்தியாவின் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, 5 ‘டி–20’ (அக். 22, 24, 27, 30, நவ. 1), 5 ஒருநாள் (நவ. 4, 7, 10, 13, 15), 2 டெஸ்ட் (நவ. 19–23, நவ. 27–டிச. 1) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பெற்றுள்ள துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ‘டி–20’, ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இதுவரை 6 ஒருநாள் போட்டிகளில் (285 ரன், 2 சதம், ‘ஸ்டிரைக் ரேட்’ 97.60) மட்டும் விளையாடி உள்ள ஜெய்ஸ்வால், கடைசியாக கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றார். அதன்பின் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் தமிழகத்தின் அஷ்வின் கூறியது: நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் விளையாடவில்லை என்றால், அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய இவருக்கு இடம் கிடைக்காதது துரதிருஷ்டவசமானது. இதனால் அவரது தன்னம்பிக்கை பாதிக்கக்கூடும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விளையாடியதுடன் ஒப்பிடுகையில், ஜெய்ஸ்வால் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது.
ஜெய்ஸ்வால் ஒரு ரன் மெஷின். இவரை போன்ற திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது அணி நிர்வாகம், தேர்வுக்குழுவினரின் கடமை. ஆனால் வாய்ப்பு மறுக்கப்படுவதை அநீதியாக கருதுகிறேன். டெஸ்ட் தொடருக்கு தயாராக, ஒருநாள் தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றம். கடைசியாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்ற ஜெய்ஸ்வால், அதன்பின் எவ்வித சர்வதேச போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் அவரது ‘பார்ம்’ பாதிக்கப்படலாம். எனவே அணித்தேர்வாளர்கள் இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அஷ்வின் கூறினார்.
