/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்திய 'பேட்டிங் ஆர்டர்' குழப்பமா: காம்பிர் மனதிலே கலக்கமா
/
இந்திய 'பேட்டிங் ஆர்டர்' குழப்பமா: காம்பிர் மனதிலே கலக்கமா
இந்திய 'பேட்டிங் ஆர்டர்' குழப்பமா: காம்பிர் மனதிலே கலக்கமா
இந்திய 'பேட்டிங் ஆர்டர்' குழப்பமா: காம்பிர் மனதிலே கலக்கமா
ADDED : டிச 12, 2025 11:24 PM

முல்லன்புர்: இந்திய அணியின் 'பேட்டிங் ஆர்டர்' அடிக்கடி மாற்றப்படுகிறது. இரண்டாவது 'டி-20' போட்டியில் அக்சர் படேலை மூன்றாவதாக களமிறக்கி அதிர்ச்சி அளித்தனர்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது. பஞ்சாப், முல்லன்புரில் நடந்த இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் (213/4), இந்தியா (162) தோற்றது.
கடைசியில் துபே: இப்போட்டியின் முதல் ஓவரிலேயே துணை கேப்டன் சுப்மன் கில் 'கோல்டன் டக்' அவுட்டானார். அடுத்து. அக்சர் படேலை 3வது இடத்தில் களமிறக்கி சோதித்தனர். 'பவர் பிளே' ஓவரில் அதிரடியாக ரன் சேர்க்க தவறிய இவர், 21 பந்தில் 21 ரன் எடுத்து 'பெவிலியன்' திரும்பினார். 3வது இடத்தில் கேப்டன் சூர்யகுமார் வந்திருக்கலாம். பின் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானதும் ஷிவம் துபே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக ஜிதேஷ் சர்மா வந்தார். 8வது இடத்தில் தான் ஷிவம் துபே களமிறக்கப்பட்டார்.
பாவம் சாம்சன்: பயிற்சியாளர் காம்பிர் வரவுக்கு பின் 'மியூசிக்கல் சேர்' போல இந்திய 'பேட்டிங் ஆர்டர்' மாற்றப்படுகிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 'டி-20' போட்டியில் பாண்ட்யாவுக்கு முன்னதாக 5வது இடத்தில் அக்சர் படேல் வந்தார். அடுத்த போட்டியில் 3வது இடத்தில் களமிறக்கப்பட்டார். அக்சர் படேல் 'பினிஷர்' பணிக்கு பொருத்தமானவர். 6 அல்லது 7வது இடம் ஏற்றது. வாஷிங்டன் சுந்தர் 3,5,7,8 என பல இடங்களில் பேட் செய்துள்ளார். 'ஓபனிங்' தவிர மற்ற இடங்கள் மாறுதலுக்கு உட்பட்டது' என காம்பிர், கேப்டன் சூர்யகுமார் தெரிவித்தனர். இது தவறான அணுகுமுறை என்பதை முல்லன்புர் போட்டி உணர்த்தியது. முன்பு 'டி-20' போட்டிகளில் துவக்க வீரர்களாக சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2 உட்பட 3 சதம் அடித்தவர் சாம்சன். ஆனால், சுப்மன் கில் துவக்க வீரராக வர வேண்டும் என்பதற்காக சாம்சன் பின்வரிசைக்கு மாற்றப்பட்டார்.
தடுமாறும் சூர்யா: இந்த ஆண்டு, 14 சர்வதேச 'டி-20' போட்டியில் சுப்மன் கில் 263 ரன் (சராசரி 23.90, 'ஸ்டிரைக் ரேட்' 142.93) தான் எடுத்துள்ளார். கேப்டன் சூர்யகுமாரும் தடுமாறுகிறார். 17 போட்டியில் 201 ரன் (சராசரி 14.35, 'ஸ்டிரைக் ரேட்' 126.41) மட்டுமே எடுத்துள்ளார். கழுத்து வலியில் இருந்து மீண்டு வரும் சுப்மன் கில்லுக்கு பதிலாக மீண்டும் துவக்க வீரராக சாம்சனை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பைக்கான பயிற்சியாக தென் ஆப்ரிக்க தொடர் அமைந்துள்ளது. இதில் தேவையற்ற சோதனை முயற்சிகளை இந்தியா தவிர்ப்பது நல்லது.
இந்திய அணி துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்காட்டே கூறுகையில்,''சுப்மன் கில் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். பிரிமியர் தொடர் போல சர்வதேச 'டி-20' போட்டியிலும் விளாச வேண்டும். சூர்யகுமாரும் உலகத்தரதம் வாய்ந்த பேட்டர். விரைவில் இழந்த 'பார்மை' மீட்டு ஜொலிப்பார். உலக கோப்பை போட்டிக்கு முன் இந்தியாவுக்கு இன்னும் 9 போட்டிகள் தான் உள்ளன. சரியான பேட்டிங் கூட்டணியை கண்டறிய முயற்சிக்கிறோம். அதனால் தான் அக்சர் படேலை முன்னதாக களமிறக்கினோம். முல்லன்புர் போட்டியில் இந்திய பவுலர்கள் ஏமாற்றினர்,''என்றார்.
தவறான திட்டம்
இந்திய அணியின் முன்னாள் வீரர் உத்தப்பா கூறுகையில்,''பெரிய இலக்குளை 'சேஸ்' செய்யும் போது 'டாப்-ஆர்டரில்' முன்னணி பேட்டர் தான் களமிறங்க வேண்டும். 'பின்ச் ஹிட்டர்' அடிப்படையில் அக்சர் படேலை அனுப்பியிருந்தால், அவர் அதிரடியாக ரன் சேர்த்திருக்க வேண்டும். 21 பந்தில் 21 ரன் எடுத்ததால், திட்டம் நிறைவேறவில்லை. 'பவர்பிளே' (முதல் 6 ஓவர்) ஓவரில் சிறந்த பேட்டர்கள் களத்தில் இருப்பதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.'டாப்-3' வீரர்களை மாற்றக்கூடாது,''என்றார்
தென் ஆப்ரிக்க முன்னாள் 'வேகப்புயல்' ஸ்டைன் கூறுகையில்,''மூன்றாவது இடத்தில் அக்சர் படேலை களமிறக்கி பெரும் தவறு செய்தனர். இந்த இடத்தில் அணியின் சிறந்த பேட்டர் தான் வர வேண்டும். சூர்யகுமார் வந்திருக்கலாம்,''என்றார்.

