/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சத்தம் இல்லாமல் சாதிக்கும் ஜடேஜா: டெஸ்ட் அரகில் காத்திருக்கும் சாதனை
/
சத்தம் இல்லாமல் சாதிக்கும் ஜடேஜா: டெஸ்ட் அரகில் காத்திருக்கும் சாதனை
சத்தம் இல்லாமல் சாதிக்கும் ஜடேஜா: டெஸ்ட் அரகில் காத்திருக்கும் சாதனை
சத்தம் இல்லாமல் சாதிக்கும் ஜடேஜா: டெஸ்ட் அரகில் காத்திருக்கும் சாதனை
ADDED : செப் 23, 2024 11:05 PM

சென்னை: டெஸ்ட் அரங்கில் சத்தம் இல்லாமல் சாதிக்க காத்திருக்கிறார் ரவிந்திர ஜடேஜா. 3000 ரன் + 300 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இடம் பெற உள்ளார்.
இந்திய அணியின் 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா, 35. அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார். சத்தம் எழுப்பாமல், இலக்குகளை தாக்கும் போர் விமானம் போல அமைதியாக சாதிப்பார். அஷ்வின் மாதிரி துணிச்சலாக பேட்டி கொடுக்க மாட்டார். ஆனால், இவரது போராடும் குணம் மகத்தானது. வங்கதேசத்திற்கு எதிரான சமீபத்திய சென்னை டெஸ்டில், இந்தியா 6 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்து தவித்தது. அப்போது அஷ்வின்-ஜடேஜா சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்து அணியை மீட்டனர். சதம் அடித்த அஷ்வினை பற்றி அதிகம் பேசினர். 86 ரன் எடுத்த ஜடேஜாவை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.
இப்போட்டியில் ஜடேஜா மொத்தம் 5 விக்கெட் (2+3) வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் லிட்டன் தாசை ஒரு ரன்னுக்கு அவுட்டாக்கினார். 6 விக்கெட் சாய்த்த அஷ்வினை பாராட்டியவர்கள், ஆபத்தான லிட்டனை வெளியேற்றிய ஜடேஜாவுக்கு போதிய அங்கீகாரம் தரவில்லை. இதுவரை டெஸ்டில் 299 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், 3000 ரன் + 300 விக்கெட் வீழ்த்திய ஜாம்பவான் பட்டியலில் இடம் பிடிப்பார். கான்பூரில் செப். 27ல் துவங்க உள்ள வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இம்மைல்கல்லை எட்டலாம்.
கலக்கல் கூட்டணி: கடந்த 2012ல் இருந்து அஷ்வின்-ஜடேஜா 'சுழல்' கூட்டணி அசத்துகிறது. இருவரும் சேர்ந்து இந்திய மண்ணில் 45 டெஸ்டில் விளையாடியுள்ளனர். 34 வெற்றி, 3, தோல்வி, 8ல் 'டிரா'வை சந்தித்துள்ளனர். இப்போட்டிகளில் அஷ்வின் 263, ஜடேஜா 218 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.
மனதில் திருப்தி: இந்திய அணியின் முன்னாள் 'ஸ்பின்னர்' ஒருவர் கூறுகையில்,''ஜடேஜாவால் சற்று அதிகம் பயன் அடைந்தவர் அஷ்வின். மந்தமான ஆடுகளத்தில் கூட கட்டுக்கோப்பாக பந்துவீசுவார் ஜடேஜா. எதிரணி பேட்டர்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்பார். இதனால் அஷ்வின், பும்ரா, ஷமி போன்ற மற்ற வீரர்கள் பந்துவீச்சில் 'ரிஸ்க்' எடுத்து ரன் எடுக்க முயற்சிப்பர். அப்போது விக்கெட்டை பறிகொடுப்பர். தன்னலமற்றவர் ஜடேஜா. பெரிய அளவில் பேட்டி கொடுப்பதில்லை. பேட்டிங் வரிசையில் இந்த இடம் தான் வேண்டும் என அடம் பிடிப்பதில்லை. விளம்பரம் தேடுவதில் ஆர்வம் இல்லாதவர். அணிக்கு தனது பங்களிப்பை வழங்கிய திருப்தியில் வாழும் அமைதியான வீரர்.இவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்,''என்றார்.