UPDATED : நவ 24, 2024 11:28 PM
ADDED : நவ 23, 2024 10:59 PM

பெர்த்: டெஸ்டில் நான்காவது சதம் அடித்தார் ஜெய்ஸ்வால். பெர்த்தில் சச்சினுக்கு (114 ரன், 1992, 18 ஆண்டு 283 நாள்) பிறகு சதம் விளாசிய இரண்டாவது இளம் இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால் (22 ஆண்டு, 330 நாள்).
* கவாஸ்கர் (127 ரன், 1977), மொகிந்தர் அமர்நாத் (100 ரன், 1977), சச்சின் (114 ரன், 1992), கோலிக்கு (123 ரன், 2018) பின் பெர்த்தில் சதம் அடித்த 5வது இந்திய வீரரானார்.
* பெர்த்தில் அதிக ரன் எடுத்த வீரரானார் ஜெய்ஸ்வால் (161). இவர், கவாஸ்கரை (127 ரன், 1977) முந்தினார்.
201 ரன்டெஸ்ட் அரங்கில் ஆஸ்திரேலிய மண்ணில், இந்தியா சார்பில் துவக்கத்தில் அதிக ரன் (201) எடுத்து அசத்தினர் ஜெய்ஸ்வால்-ராகுல். இதற்கு முன் ஸ்ரீகாந்த், கவாஸ்கர் சேர்ந்து 191 ரன் (1986, சிட்னி) எடுத்திருந்தனர்.
தொடரும் '150'
டெஸ்ட் போட்டிகளில் நான்காவது முறையாக 150 ரன்னுக்கு மேல் எடுத்தார் ஜெய்ஸ்வால். 23 வயதுக்குள் அதிக முறை 150 ரன் எடுத்தவர் பட்டியலில் மியாண்தத் (பாக்.,), கிரேம் ஸ்மித் (தெ.ஆ.,) உடன் இரண்டாவது இடத்தை (தலா 4 முறை) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் பிராட்மேன் (ஆஸி., 5 முறை) உள்ளார்.
* ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்டில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால். இதற்கு முன் ஜெய்சிம்மா (101, பிரிஸ்பேன், 1967-68), கவாஸ்கர் (113, பிரிஸ்பேன், 1977-78) சதம் அடித்தனர்.
35 சிக்சர்
டெஸ்டில் ஒரு ஆண்டில் (2024) அதிக சிக்சர் (35, 12 போட்டி) அடித்தவர் ஆனார் ஜெய்ஸ்வால். இவர், பிரண்டன் மெக்கலம் (2014, 9 போட்டி, 33 சிக்சர்) சாதனையை தகர்த்தார்.
பாதுகாவலர் காயம்
ஸ்டார்க் வீசிய பந்தை (100.5வது ஓவர்) சிக்சருக்கு பறக்கவிட்டார் கோலி. அப்போது எல்லையை கடந்து 'பவுன்ஸ்' ஆன பந்து, அங்கு அமர்ந்திருந்த பாதுகாவலர் தலையில் தாக்கியது. வலியால் அவதிப்பட்ட இவருக்கு, லியான் உள்ளிட்டோர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
30...81வது சதம்
டெஸ்டில் தனது 30வது சதம் அடித்தார் கோலி. அதிக சதம் அடித்தவர் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனை (29) முந்தினார். இப்பட்டியலில் 15வது இடத்தை சந்தர்பால் (வெ.இ.,), ஹைடன்(ஆஸி.,) உடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் சச்சின்(51 சதம்) உள்ளார்.
* டெஸ்டில் 30 சதம் என்ற மைல்கல்லை எட்டிய நான்காவது இந்திய வீரரானார் கோலி. முதல் மூன்று இடங்களில் சச்சின் (51), டிராவிட் (36), கவாஸ்கர் (34) உள்ளனர்.
* சர்வதேச போட்டிகளில் கோலி 81வது சதம் (டெஸ்டில் 30, ஒருநாள் போட்டியில் 50, ஒரு 'டி-20' சதம்) எட்டினார். சர்வதேச அளவில் அதிக சதம் அடித்தவரில் 2வது இடத்தில் நீடிக்கிறார். முதலிடத்தில் சச்சின் (100 சதம்) உள்ளார்.
* ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதம் அடித்த இந்திய வீரரானார் கோலி (7). இவர், சச்சின் சாதனையை (6 சதம்) தகர்த்தார்.
* பெர்த்தில் தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்தார். இதற்கு முன் இங்கு 2018ல் 123 ரன் எடுத்தார்.
* ஆஸ்திரேலிய மண்ணில் அனைத்துவித கிரிக்கெட்டிலும் சேர்த்து அதிக சதம் (10) அடித்த வீரரானார் கோலி.