
லார்ட்ஸ்: இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்தின் ஜோ ரூட் சதம் விளாசினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. நேற்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் துவங்கியது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட், ஜோ ரூட் ஜோடி நம்பிக்கை தந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது டக்கெட் (40) அவுட்டானார். ஹாரி புரூக் (33) ஓரளவு கைகொடுத்தார். ஜேமி ஸ்மித் (21), வோக்ஸ் (6) நிலைக்கவில்லை. லகிரு குமாரா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் தனது 33வது சதத்தை பதிவு செய்தார். ஏழாவது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்த போது ஜோ ரூட் (143) அவுட்டானார். அட்கின்சன் அரைசதம் கடந்தார்.
தேநீர் இடைவேளைக்கு பின் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 322 ரன் எடுத்திருந்தது. அட்கின்சன் (54), மாத்யூ பாட்ஸ் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லகிரு குமாரா, மிலன் ரத்னாயகே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

