UPDATED : ஜூலை 11, 2025 10:49 PM
ADDED : ஜூலை 11, 2025 10:31 PM

லண்டன்: லார்ட்ஸ் டெஸ்டில் சதம் விளாசிய இங்கிலாந்தின் ஜோ ரூட் சாதனை படைத்தார்.
டிராவிட் சாதனை முறியடிப்புலார்ட்சில் அசத்திய இங்கிலாந்தின் ஜோ ரூட் (104 ரன்), டெஸ்ட் அரங்கில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் இந்தியாவின் டிராவிட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை (தலா 36 சதம்) முந்தி 5வது இடம் பிடித்தார்.
ஸ்மித் சாதனை சமன்
டெஸ்ட் அரங்கில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துடன் பகிர்ந்து கொண்டார் ஜோ ரூட். இருவரும் தலா 11 சதம் விளாசினர்.
மூன்றாவது வீரர்
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் தொடர்ச்சியாக 3 சதம் விளாசிய 3வது இங்கிலாந்து வீரரானார் ஜோ ரூட். கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் (143, 103) சதம் அடித்திருந்தார் ரூட். ஏற்கனவே மைக்கேல் வான் (2004-05), சர் ஜாக் 'மாஸ்டர்' ஹோப்ஸ் (1912-1926) இப்படி சாதித்தனர்.
* இந்தியா சார்பில் திலிப் வெங்சர்க்கார் மட்டும் லார்ட்சில் 'ஹாட்ரிக்' சதம் (1979, 82, 86) அடித்திருந்தார்.
எட்டு சதம்
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் அதிக சதம் விளாசிய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார் ஜோ ரூட். இதுவரை 8 சதம் அடித்துள்ளார். அடுத்த 4 இடத்தில் இங்கிலாந்தின் மைக்கேல் வான், கிரஹாம் கூச் (தலா 6 சதம்), கெவின் பீட்டர்சன், ஸ்டிராஸ் (தலா 5) உள்ளனர்.
211 'கேட்ச்'
கருண் நாயர் அடித்த பந்தை பிடித்த இங்கிலாந்தின் ஜோ ரூட், டெஸ்ட் அரங்கில் அதிக 'கேட்ச்' செய்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இதுவரை 156 டெஸ்டில், 211 'கேட்ச்' செய்துள்ளார். இந்தியாவின் டிராவிட் (210 'கேட்ச்', 164 போட்டி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.