/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஜூனியர் உலக கோப்பை: இந்திய கனவு தகர்ந்தது
/
ஜூனியர் உலக கோப்பை: இந்திய கனவு தகர்ந்தது
ADDED : பிப் 11, 2024 11:21 PM

பெனோனி: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆஸ்திரேலிய மஞ்சள் படையை கண்டாலே 'அலர்ஜி' தான். நேற்று நடந்த 'ஜூனியர்' உலக கோப்பை பைனலில் சொதப்பிய இளம் இந்திய அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது. 79 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, கோப்பையை தட்டிச் சென்றது. கடந்த ஆண்டு நடந்த 'சீனியர்' உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் உலக கோப்பை தொடர் (19 வயது) நடந்தது. பெனோனியில் நடந்த பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
ஹர்ஜாஸ் சிங் அரைசதம்
ஆஸ்திரேலிய அணிக்கு டிக்சன் அதிரடி துவக்கம் தந்தார். திவாரி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். லிம்பானி 'வேகத்தில்' சாம் கோன்ஸ்டாஸ்(0) வெளியேறினார். பின் ஹாரி டிக்சன், கேப்டன் வெய்ப்ஜென் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்தனர். வெய்ப்ஜென், 48 ரன்னுக்கு நடையை கட்டினார். சிறிது நேரத்தில் திவாரி பந்தில் முருகன் அபிஷேக்கின் கலக்கல் 'கேட்ச்சில்' டிக்சன்(42) அவுட்டானார். அப்போது ஆஸ்திரேலியா 22.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 99 ரன் எடுத்து தவித்தது.
தொடர்ந்து இந்திய பவுலர்கள் நெருக்கடி கொடுக்க தவறினர். இதனை பயன்படுத்திய ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ் நான்காவது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தனர். லிம்பானி பந்தில் ஹிக்ஸ்(20) அவுட்டானார். திவாரி பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹர்ஜாஸ், 59 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 55 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஆலிவர் பீக்(46*), சார்லி ஆண்டர்சன்(13), டாம்(8*) கைகொடுத்தனர். கடைசி 10 ஓவரில் 66 ரன் எடுக்கப்பட்டன. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன் எடுத்தது.
இந்தியா சார்பில் லிம்பானி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.
'பேட்டிங்' சரிவு
சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பேட்டிங் 'கிளிக்' ஆகவில்லை. பைனல் என்ற பொறுப்புடன் 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் விளையாடவில்லை. குல்கர்னி(3), முஷீர் கான்(22), கேப்டன் உதய் சஹாரன்(8), சச்சின் தாஸ்(9) மோலியா(9), அவனிஷ்(0) விரைவில் அவுட்டாக, 26 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 90 ரன் எடுத்து தத்தளித்தது. மனம் தளராமல் போராடிய ஆதர்ஷ் சிங் அவ்வப்போது சிக்சர், பவுண்டரி அடித்து ஆறுதல் தந்தார். இவர் 47 ரன்னுக்கு பியார்ட்மென் பந்தில் வெளியேற, நம்பிக்கை தகர்ந்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முருகன் அபிஷேக், 42 ரன் எடுத்தார். இந்திய அணி 43.5 ஓவரில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் பியார்ட்மென், மெக்மிலன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.