ADDED : டிச 09, 2024 11:15 PM

புதுடில்லி: ''காம்ப்ளியை பார்த்தால் கவலையாக உள்ளது. இவர் மீண்டு வருவதற்கு உதவ வேண்டும்,'' என கபில்தேவ் கேட்டுக் கொண்டார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி, 52. மும்பையில் 1988ல் நடந்த ஹாரிஸ் ஷீல்டு டிராபி தொடரில் ஷர்தாஷ்ரம் பள்ளிக்காக காம்ப்ளி (349), சச்சின் (326) சேர்ந்து 664 ரன் சேர்த்தனர். இருவரும் இந்திய அணிக்காக விளையாடினர். சச்சின் சாதனை நாயகனாக உச்சம் தொட்டார். ரூ. 1400 கோடிக்கு சொந்தக்காரராக உள்ளார்.
காம்ப்ளி, 104 ஒருநாள் போட்டி(2, 477 ரன்), 17 டெஸ்ட்(1,084) விளையாடினார். 2011ல் ஓய்வு பெற்றார். இதற்கு பின் மதுவுக்கு அடிமையானார். உடல் அளவில் பாதிக்கப்பட்டார். நெஞ்சு வலி ஏற்பட 'ஆஞ்சியோபிளாஸ்டி' சிகிச்சை எடுத்துக் கொண்டார். இவரால் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடியாததால், வறுமைக்கு தள்ளப்பட்டார். பி.சி.சி.ஐ., மாதம் தோறும் வழங்கும் ரூ. 30,000 'பென்ஷன்' தொகையில் வாழ்க்கையை நடத்துகிறார்.
சமீபத்தில் மும்பையில் நடந்த பயிற்சியாளர் ராமாகாந்த் அச்ரேக்கரின் நினைவுநாள் நிகழ்ச்சியில் காம்ப்ளி பங்கேற்றார். அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிப் போயிருந்தார். நண்பர் சச்சின் கையை இறுகப்பிடித்துக் கொண்ட தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கூறுகையில்,''சமீபத்தில் காம்ப்ளியை பார்த்த அனைத்து கிரிக்கெட் வீரர்களும் கவலை அடைந்தனர். இவருக்கு உதவ வேண்டும். தனது உடல்நிலையில் அவர் அக்கறை செலுத்த வேண்டும். மறுவாழ்வு மையத்திற்கு சென்று மீண்டு வர வேண்டும்.
ரோகித் அசத்துவார்ஒரு டெஸ்ட் தோல்வியை வைத்து கேப்டன் ரோகித் சர்மாவை மதிப்பீடு செய்யக்கூடாது. இவர், தனது திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. 6 மாதங்களுக்கு முன் தான் 'டி-20' உலக கோப்பை வென்று தந்தார். வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார்,''என்றார்.