சொத்து வரி முறையாக நிர்ணயம் செய்துள்ளார்களா; தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
சொத்து வரி முறையாக நிர்ணயம் செய்துள்ளார்களா; தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
ADDED : ஆக 26, 2025 01:31 PM

மதுரை: மதுரை சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, தமிழகம் முழுவதும் வரி விதிப்பு முறையாக செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி சொத்து வரிவிதிப்பு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. ஏற்கனவே உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மதுரை போலீஸ் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு குழு வரிவிதிப்பு முறைகேடுவை விசாரித்து வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள அசையா சொத்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வது தொடர்பான அறிக்கையை மாநகராட்சி கமிஷனர் நேற்று தாக்கல் செய்தார்.
அதில் 100 வார்டுகளுக்கும் 100 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆய்வு செய்வதற்கு இரண்டு கட்டங்களாக 4 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும் எனக் குறிப்பிட்டார். இதை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு, 'இதுபோல் தமிழகத்தில் உள்ள பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் செயல் திட்டத்தை வகுத்து ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள சொத்து வரி முறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டது.