15 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தால் சிக்கல்தான்; சென்னை மேயர் அச்சம்
15 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தால் சிக்கல்தான்; சென்னை மேயர் அச்சம்
ADDED : அக் 26, 2025 06:22 AM

சென்னை: ''சென்னையில் 15 செ.மீ., வரை மழை பெய்தால், உடனே வடிந்து விடும். அதற்கு மேல் மழை பெய்தால் சிக்கல்தான்,'' என, மாநகராட்சி மேயர் பிரியா கூறினார்.
மழைக்கால பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ராயபுரம் பகுதிகளில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின், பிரியா அளித்த பேட்டி: வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து, தினமும் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.
பகிங்ஹாம் கால்வாயில், 120 கி.மீ., நீளத்திற்கு துார்வாரும் பணி நடந்து வருகிறது. ஓட்டேரி நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் துார்வாரும் பணி நடந்து வருகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதால், முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையில் அதிக மழைப்பொழிவு இருக்கும்போது, சாலைகளில் பள்ளம் ஏற்படுகிறது. தற்போது, 2,000 சாலைகள் சேதமடைந்துள்ளன. வார்டு வாரியாக நிதி ஒதுக்கி, சீரமைப்பு பணி நடந்து வருகிறது. சென்னையில், 2022ம் ஆண்டு முதல் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு முன், 10 முதல் 15 நாட்கள் மழைநீர் தேக்கம் இருக்கும். தற்போது, இரவில் மழைநீர் தேங்கினாலும், விடிவதற்குள் அகற்றப்பட்டு விடுகிறது.
சென்னை ஒரு திட்டமிடப்படாத நகரம். இங்கு நிறைய கால்வாய்கள் உள்ளன. நீர்நிலைகளை பொதுமக்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இச்சூழலில், 15 செ.மீ., வரை மழை பெய்தால் உடனே மழைநீர் வெளியேறுவதற்கான சூழல் நிலவுகிறது. 'மிக்ஜாம்' புயல்போல் 40 செ.மீ., மழை பெய்தால் நீர் வெளியேறுவது சிக்கலாகிவிடும். அப்போது, மோட்டார் பம்புகள் வாயிலாக வெளியேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

