ADDED : மே 03, 2026 09:03 PM

சென்னை: மும்பைக்கு எதிராக பேட்டிங்கில் அசத்திய சென்னை அணியின் கார்த்திக்
சர்மா (54*), கிரிக்கெட் லீக் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு
செய்தார். ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டரான கார்த்திக் சர்மா
20, அரைசதம் எட்டிய தருணத்தில் தனது பேட்டை வைத்து துப்பாக்கி சுடுவது போல
கொண்டாடினார். கடந்த 2005ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 183 ரன்
விளாசிய இந்தியாவின் தோனி, இப்படி கொண்டாடி மகிழ்ந்தார்.
கார்த்திக்
சர்மா கூறுகையில், ''ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது.
இப்போட்டியில் அரைசதம் விளாசினால், துப்பாக்கி சுடுவது போல மகிழ்ச்சியை
கொண்டாட திட்டமிட்டிருந்தேன். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட
முயற்சிப்பேன்,'' என்றார்.
பிளமிங் பாராட்டு
சென்னை: சேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது. சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (67*), கார்த்திக் சர்மா (54*) கைகொடுத்தனர்.
சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், ''முதல் 7 போட்டிகளில் ருதுராஜ் தடுமாறினார். இதனால் இவரது கேப்டன் பதவி குறித்து விமர்சனம் எழுந்தன. கடந்த இரு போட்டியில் (74, 67*), இவரது பேட்டிங்கில் நல்ல முன்னேற்றத்தை காண முடிந்தது. இந்த 'பார்ம்', இவரை சிறந்த கேப்டனாக செயல்பட உதவுகிறது.
கார்த்திக் சர்மா திறமையானவர் என்பதால் தான் ஏலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தமானார். நாளுக்கு நாள் அவரது பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. மும்பைக்கு எதிராக இவர் விளையாடியதை நினைத்து பெருமை கொள்கிறோம். இவருக்கு 4வது இடம் பொருத்தமாக உள்ளது,'' என்றார்.
