/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'கிங்' கோலி, படிக்கல் கலக்கல்: பெங்களூரு 5வது வெற்றி
/
'கிங்' கோலி, படிக்கல் கலக்கல்: பெங்களூரு 5வது வெற்றி
'கிங்' கோலி, படிக்கல் கலக்கல்: பெங்களூரு 5வது வெற்றி
'கிங்' கோலி, படிக்கல் கலக்கல்: பெங்களூரு 5வது வெற்றி
ADDED : ஏப் 20, 2025 11:38 PM

முல்லன்புர்: கோலி, தேவ்தத் படிக்கல் அரைசதம் விளாச, பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது.
முல்லன்புரில் (பஞ்சாப்) நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர், 'பவுலிங்' தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் லிவிங்ஸ்டன் நீக்கப்பட்டு, ரொமாரியோ ஷெப்பர்டு வாய்ப்பு பெற்றார்.
குர்ணால் திருப்பம்: பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா நல்ல துவக்கம் தந்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாச, 4.1 ஓவரில் 42 ரன் எடுக்கப்பட்டன. உடனே சுதாரித்த கேப்டன் படிதர், 'சுழல்' நாயகன் குர்ணால் பாண்ட்யாவை அழைத்தார். பாண்ட்யா வலையில் ஆர்யா (22), பிரப்சிம்ரன் (33) சிக்கினர். ஷெப்பர்டு பந்தில் கேப்டன் ஷ்ரேயஸ் (6) நடையை கட்டினார். நேஹல் வதேரா (5) ரன் அவுட்டாக, 9 ஓவரில் 76/4 ரன் எடுத்து தத்தளித்தது. சுயாஷ் சர்மா ஓவரில் (14வது), ஜோஷ் இங்லிஸ் (29), ஸ்டாய்னிஸ் (1) வெளியேறினர். கடைசி 5 ஓவரில் 38 ரன் தான் எடுக்கப்பட்டன. பஞ்சாப் அணி 20 ஓவரில் 157/6 ரன் எடுத்தது. தனிநபராக போராடிய சஷாங்க் சிங் (31), யான்சென் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
பெங்களூரு சார்பில் குர்ணால் பாண்ட்யா, சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இருவர் அருமை: சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் (1) ஏமாற்றினார். பின் அனுபவ கோலி, தேவ்தத் படிக்கல் கலக்கினர். 'ரிஸ்க்' எடுக்காமல் அருமையாக விளையாடினர். 2வது விக்கெட்டுக்கு 69 பந்தில் 103 ரன் சேர்த்தனர். அரைசதம் எட்டிய படிக்கல், 61 ரன்னுக்கு (5x4, 4x6), ஹர்பிரீத் பிரார் பந்தில் அவுட்டானார். யான்சென் பந்தை ஒரு ரன்னுக்கு தட்டிவிட்ட கோலி, 43 பந்தில் அரைசதம் எட்டினார். சஹால் 'சுழலில்' படிதர் (12) வெளியேறினார். வதேரா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜிதேஷ் சர்மா வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 18.5 ஓவரில் 159/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் கோலி (73, 7x4, 1x6), ஜிதேஷ் சர்மா (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
'சேஸ் மாஸ்டர்' சாதனை
பிரிமியர் அரங்கில் நேற்று 59வது அரைதம் எட்டினார் கோலி. பிரிமியர் வரலாற்றில் 50 அல்லது அதற்கு மேல், அதிக முறை (67) ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்திற்கு (59 அரைசதம் + 8 சதம் = 67) முன்னேறி சாதனை படைத்தார். அடுத்த இடத்தில் வார்னர் (62 அரைசதம் + 4 சதம் =66) உள்ளார்.
* 'டி-20' அரங்கில் அதிக அரைசதம் அடித்தவர் பட்டியலில் கோலி இரண்டாவது இடத்தில் (101 அரைசதம், 407 போட்டி) உள்ளார். முதலிடத்தில் வார்னர் (ஆஸி., 108, 402 போட்டி) உள்ளார்.
* இம்முறை பெங்களூரு அணி 'சேஸ்' செய்த போட்டிகளில், 59 (36 பந்து, எதிர், கோல்கட்டா), 62 (45, எதிர், ராஜஸ்தான்), 73 (54, எதிர், பஞ்சாப்) அரைசதம் கடந்த கோலி அவுட்டாகாமல் இருந்தார். வெற்றிக்கு கைகொடுத்த இவர், 'சேஸ் மாஸ்டர்' என்பதை அழுத்தமாக நிரூபித்தார்.
* இம்முறை உள்ளூரில் ஏமாற்றும் பெங்களூரு அணி, 'வெளியே' பங்கேற்ற 5 போட்டிகளிலும் வென்றது.
* பெங்களூருவில் கடந்த ஏப்.18ல் நடந்த முதல் லீக் போட்டி, மழையால் 14 ஓவராக நடந்தது. இதில் பஞ்சாப் வென்றது. இதற்கு 48 மணி நேரத்தில் நேற்று பெங்களூரு பதிலடி கொடுத்தது.

