/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தெறிக்கவிட்ட கோலி...பறக்கவிட்ட பும்ரா: பயிற்சியில் இந்திய வீரர்கள்
/
தெறிக்கவிட்ட கோலி...பறக்கவிட்ட பும்ரா: பயிற்சியில் இந்திய வீரர்கள்
தெறிக்கவிட்ட கோலி...பறக்கவிட்ட பும்ரா: பயிற்சியில் இந்திய வீரர்கள்
தெறிக்கவிட்ட கோலி...பறக்கவிட்ட பும்ரா: பயிற்சியில் இந்திய வீரர்கள்
ADDED : செப் 16, 2024 10:32 PM

சென்னை: சென்னை டெஸ்டில் சாதிக்க இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செப். 19ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டனர். தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பிர், பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல் உடன் இருந்தனர்.
முதலில் விராத் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 'பேட்டிங்' வலைப்பயிற்சி செய்தனர். இவர்களுக்கு பும்ரா, அஷ்வின் பந்துவீசினர். விராத் கோலி சிக்சருக்கு அடித்த பந்து, சேப்பாக்கம் மைதானத்தின் வீரர்கள் 'டிரெஸிங் ரூம்' அருகில் இருந்த சுவற்றை பதம்பார்த்தது. சுவர் உடைந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் 'வைரலாக' பரவியது.
பாவம் ஜெய்ஸ்வால்: பும்ரா, 'நெட் பவுலர்'களான சிம்ரன்ஜீத் சிங், குர்னுார் பிரார், குர்ஜன்பிரீத் சிங் 'வேகத்தில்' இளம் இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போல்டானார். இதில் பும்ரா பந்தில் மட்டும் இரு முறை போல்டாக 'ஸ்டம்ப்ஸ்' பறந்தன.
பின் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், சர்பராஸ் கான் 'பேட்டிங்' பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் ரோகித், நீண்ட நேரம் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டார். இவர்களை தொடர்ந்து ரவிந்திர ஜடேஜா, ரிஷாப் பன்ட், துருவ் ஜுரெல், முகமது சிராஜ் ஆகியோர் உள்ளூர் பவுலர்கள் உதவியுடன் 'பேட்டிங்' பயிற்சி மேற்கொண்டனர்.
'சுழல்' வீரர்களான அஷ்வின், ஜடேஜா, குல்தீப், அக்சர் படேல், பவுலிங் பயிற்சி மேற்கொண்டனர். இதேபோல வங்கதேச அணியினரும் பயிற்சி மேற்கொண்டனர்.
காத்திருக்கும் சாதனை
வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்தியாவின் கோலி, இரண்டு சாதனை படைக்க உள்ளார். இவர், இன்னும் 58 ரன் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்னை எட்டலாம். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டிய வீரர்கள் வரிசையில் இந்திய ஜாம்பவான் சச்சினை (623 இன்னிங்ஸ்) முந்தலாம். கோலி இதுவரை மூன்றுவித கிரிக்கெட்டிலும் 591 இன்னிங்சில் 26,942 ரன் எடுத்துள்ளார். தவிர, 27 ஆயிரம் ரன் எடுத்த 4வது வீரராகலாம்.
* டெஸ்டில் 191 இன்னிங்சில், 8848 ரன் எடுத்துள்ள கோலி, இன்னும் 152 ரன் எடுக்கும் பட்சத்தில், டெஸ்ட் அரங்கில் 9 ஆயிரம் ரன் எடுத்த 4வது இந்திய வீரராகலாம். ஏற்கனவே சச்சின் (15,921 ரன்), டிராவிட் (13,265), கவாஸ்கர் (10,122) இம்மைல்கல்லை கடந்தனர்.
யாருக்கு இடம்
சென்னை, சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய 'லெவன்' அணியில் 3 சுழற்பந்துவீச்சாளர் தேர்வு செய்யப்படுவர். சீனியர் வீரர்களான அஷ்வின், ரவிந்திர ஜடேஜாவுடன் குல்தீப் யாதவ் இடம் பிடிப்பார். அக்சர் படேலுக்கு இடம் கிடைப்பது சந்தேகம்.