/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
குல்தீப் 'நம்பர்-3': ஐ.சி.சி., பவுலர் தரவரிசையில்
/
குல்தீப் 'நம்பர்-3': ஐ.சி.சி., பவுலர் தரவரிசையில்
ADDED : ஆக 20, 2025 10:05 PM

துபாய்: ஐ.சி.சி., பவுலர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 650 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய பவுலர் ரவிந்திர ஜடேஜா (616) 9வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் சாய்த்த தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேஷவ் மஹாராஜ் (687 புள்ளி) 3வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இலங்கையின் மகேஷ் தீக் ஷனா (671) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் (784), ரோகித் சர்மா (756) முதலிரண்டு இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். மற்ற இந்திய வீரர்களான விராத் கோலி (736), ஷ்ரேயஸ் (704) முறையே 4, 8வது இடத்தில் தொடர்கின்றனர்.
அபிஷேக் முதலிடம்
சர்வதேச 'டி-20' பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (829), திலக் வர்மா (804) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். சூர்யகுமார் யாதவ் (739 புள்ளி, 6வது இடம்), ஜெய்ஸ்வால் (673 புள்ள, 10வது இடம்) 'டாப்-10' பட்டியலில் உள்ளனர். தென் ஆப்ரிக்காவின் டிவால்டு பிரவிஸ் (665), 21வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு முன்னேறினார்.