/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
குல்தீப் 'மேஜிக்'...இந்தியாவுக்கு 'செக்': கேம்பல், ஹோப் நம்பிக்கை
/
குல்தீப் 'மேஜிக்'...இந்தியாவுக்கு 'செக்': கேம்பல், ஹோப் நம்பிக்கை
குல்தீப் 'மேஜிக்'...இந்தியாவுக்கு 'செக்': கேம்பல், ஹோப் நம்பிக்கை
குல்தீப் 'மேஜிக்'...இந்தியாவுக்கு 'செக்': கேம்பல், ஹோப் நம்பிக்கை
ADDED : அக் 12, 2025 11:26 PM

புதுடில்லி: டில்லி டெஸ்டில் 'சுழலில்' அசத்திய குல்தீப், 5 விக்கெட் சாய்த்தார். வெஸ்ட் இண்டீசின் கேம்பல், ஹோப் தாக்குதல் பாணியில் விளையாடி, இந்தியாவின் விரைவான வெற்றிக்கு 'செக்' வைத்தனர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 518/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 140/4 ரன் எடுத்து, 378 ரன் பின் தங்கியிருந்தது.
'பாலோ-ஆன்' சோகம்: மூன்றாவது நாள் ஆட்டத்தில் குல்தீப் 'சுழலில்' ஷாய் ஹோப் (36) போல்டானார். தொடர்ந்து மிரட்டிய குல்தீப் பந்துவீச்சில் டெவின் இம்லாச் (21), ஜஸ்டின் கிரிவ்ஸ் (17) வெளியேறினர். சிராஜ் 'வேகத்தில்' வாரிகன் (1) போல்டானார். 7 ஓவர் இடைவெளியில் 4 விக்கெட் சரிய, 175/8 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. பும்ரா பந்தில் பியர்ரி (23) நடையை கட்டினார். சீல்சை (13) அவுட்டாக்கிய குல்தீப், தனது 5வது விக்கெட்டை பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 248 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆண்டர்சன் (24) அவுட்டாகாமல் இருந்தார். 270 ரன் முன்னிலை பெற்ற இந்திய அணி, வெஸ்ட் இண்டீசிற்கு 'பாலோ-ஆன்' கொடுத்தது.
இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி துவக்கத்தில் தடுமாறியது. சிராஜ் பந்தில் டேகநரைன் சந்தர்பால் (10) அவுட்டானார். வாஷிங்டன் வலையில் அதனாசே (7) போல்டாக, தேநீர் இடைவேளையின் போது 35/2 ரன் எடுத்து தவித்தது.
இருவர் அரைசதம்: பின் ஷாய் ஹோப், ஜான் கேம்பல் தாக்குதல் பாணியில் விளையாடி, இந்திய பவுலர்களை பதற வைத்தனர். 3வது விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்தனர். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாச, ஜடேஜா, குல்தீப் உள்ளிட்ட 'ஸ்பின்னர்'கள் செய்வதறியாது திகைத்தனர். ஆடுகளம் மந்தமாக இருந்ததால், விக்கெட் வீழ்த்த முடியவில்லை. நிலைமையை உணர்ந்த கேப்டன் சுப்மன் கில் தற்காப்பு 'பீல்டிங்' வியூகம் அமைத்தார். எல்லையில் அதிக பீல்டர்களை நிறுத்தினார். குல்தீப் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கேம்பல், இத்தொடரில் அரைசதம் அடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரரானார். மறுபக்கம் ஜடேஜா பந்தில் ஒரு ரன் எடுத்த, ஹோப் அரைசதம் எட்டினார். மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 173/2 ரன் எடுத்து, 97 ரன் பின்தங்கியிருந்தது. கேம்பல் (87, 9X4, 2X6), ஹோப் (66, 8X4, 2X6) அவுட்டாகாமல் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 97 ரன் தேவை. இன்று பவுலர்கள் எழுச்சி கண்டால், இந்திய அணி வெற்றியை ருசிக்கலாம்.
சுதர்சன் நிலை என்ன
டில்லி டெஸ்டின் இரண்டாம் நாளில் கேம்பல் அடித்த பந்தை 'ஷார்ட் லெக்' திசையில் நின்றிருந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் பிடித்தார். அப்போது வலது கையில் காயம் ஏற்பட்டது. நேற்று பீல்டிங் செய்ய வரவில்லை. மாற்று வீரராக தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். இது பற்றி பி.சி.சி.ஐ., வெளியிட்ட செய்தியில்,'சுதர்சனுக்கு பெரிதாக காயம் ஏற்படவில்லை. நலமாக உள்ளார். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 'பீல்டிங்' செய்ய களமிறங்கவில்லை. காயத்தின் தன்மை பற்றி மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
டில்லி டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேடன் சீல்ஸ் எறிந்த பந்து, இந்தியாவின் ஜெய்ஸ்வால் பேடு மீது தாக்கியது. ஐ.சி.சி., நடத்தை விதிமுறைப்படி எதிரணி வீரரை நோக்கி பந்தை ஆபத்தான முறையில் எறிவது தவறு. இது பற்றி அம்பயர்கள் புகார் அளித்தனர். 'மேட்ச் ரெப்ரி' ஆன்டி பைகிராப்ட் விசாரித்தார். அப்போது, 'ரன் அவுட்' செய்வதற்காகவே பந்தை எறிந்ததாக சீல்ஸ் வாதிட்டார். இதை ஏற்க மறுத்தார் பைகிராப்ட். 'ரீப்ளே'வில் ஜெய்ஸ்வால் 'கீரீசிற்குள்' நிற்கும் போது தேவையில்லாமல் பந்தை எறிந்தது உறுதியானது. இதையடுத்து சீல்சிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம், ஒரு தகுதி இழப்பு புள்ளி தண்டனையாக வழங்கப்பட்டது.
5 விக்கெட்
முதல் இன்னிங்சில் 'சுழல்' ஜாலம் நிகழ்த்திய குல்தீப், டெஸ்டில் 5வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். இதுவரை 15 டெஸ்டில் 65 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
* டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இடது கை மணிக்கட்டு ஸ்பின்னர்களில் முதலிடத்தை (தலா 5 முறை) இங்கிலாந்தின் ஜானி வார்ட்லே (28 போட்டி) உடன் குல்தீப் (15 போட்டி) பகிர்ந்து கொண்டார். அடுத்த இடத்தில் தென் ஆப்ரிக்காவின் பால் ஆடம்ஸ் (4 முறை) உள்ளார்.
* வெஸ்ட் இண்டீசிற்கு சிம்மசொப்பனமாக உள்ளார் குல்தீப். வெஸ்ட் இண்டீசிற்கு எதிராக 4 டெஸ்டில் 19 விக்கெட், 19 ஒருநாள் போட்டியில் 33 விக்கெட், 9 'டி-20' போட்டியில் 17 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இது முடியுமா
வெஸ்ட் இண்டீஸ் வீரர் பியர்ரி கூறுகையில்,''டில்லி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. எங்களது பேட்டர்கள் இன்று சிறப்பாக விளையாடி அணிக்கு முன்னிலை பெற்று தர வேண்டும். ஐந்தாவது நாள் வரை நீடித்தால், போட்டி பரபரப்பாக இருக்கும்,''என்றார்.
இந்திய அணியின் துணை பயிற்சியாளர் டென் டஸ்காட்டே கூறுகையில்,''ஆடுகளம் பந்துவீச்சுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், மந்தமாக மாறியதால், எதிரணியினர் எளிதாக ரன் சேர்த்தனர். இன்று இந்திய ஸ்பின்னர்களுக்கு ஆடுகளம் சவாலாக இருக்கலாம்,''என்றார்.