/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது லக்னோ: பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அபாரம்
/
பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது லக்னோ: பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அபாரம்
பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது லக்னோ: பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அபாரம்
பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது லக்னோ: பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அபாரம்
ADDED : மே 04, 2025 11:35 PM

தர்மசாலா: லக்னோவுக்கு எதிராக அசத்திய பஞ்சாப் அணி 37 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தர்மசாலாவில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப், லக்னோ அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷாப் பன்ட், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
பிரப்சிம்ரன் அபாரம்: பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (1) ஏமாற்றினார். மயங்க் யாதவ் வீசிய 2வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் பறக்கவிட்ட ஜோஷ் இங்லிஸ் (30) கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய பிரப்சிம்ரன், 30 பந்தில் அரைசதம் எட்டினார். கேப்டன் ஷ்ரேயஸ், 45 ரன்னில் அவுட்டானார். நேஹல் வதேரா (16) நிலைக்கவில்லை. அவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 26 ரன் கிடைத்தது. பிரப்சிம்ரன் 91 ரன்னில் (7 சிக்சர், 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.
பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 236 ரன் எடுத்தது. ஷஷாங்க் (33), ஸ்டாய்னிஸ் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
படோனி அரைசதம்: கடின இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு, பஞ்சாப் பவுலர்கள் தொல்லை தந்தனர். அர்ஷ்தீப் சிங் 'வேகத்தில்' மிட்சல் மார்ஷ் (0), மார்க்ரம் (13), நிக்கோலஸ் பூரன் (6) வெளியேறினர். அஸ்மதுல்லா உமர்ஜாய் பந்தில் கேப்டன் ரிஷாப் பன்ட் (18), டேவிட் மில்லர் (11) அவுட்டாகினர். லக்னோ அணி 73 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து திணறியது.
பின் இணைந்த ஆயுஷ் படோனி, அப்துல் சமத் ஜோடி ஆறுதல் தந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த போது சமத் (45) அவுட்டானார். விஜய்குமார் வைஷாக் பந்தை சிக்சருக்கு அனுப்பிய படோனி, 32 பந்தில் அரைசதம் கடந்தார். சகால் 'சுழலில்' படோனி (74) சிக்கினார்.
லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 199 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அவேன் கான் (19), பிரின்ஸ் யாதவ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.