தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/லக்னோ அணி கலக்கல் வெற்றி: பஞ்சாப் அணி ஏமாற்றம்

லக்னோ அணி கலக்கல் வெற்றி: பஞ்சாப் அணி ஏமாற்றம்

லக்னோ அணி கலக்கல் வெற்றி: பஞ்சாப் அணி ஏமாற்றம்


UPDATED : மார் 31, 2024 12:04 AM

ADDED : மார் 31, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 31, 2024 12:04 AM ADDED : மார் 31, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய லக்னோ அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவானின் அரைசதம் வீணானது.

இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. லக்னோவில் நடந்த லீக் போட்டியில் லக்னோ, பஞ்சாப் அணிகள் மோதின. லக்னோ 'ரெகுலர்' கேப்டன் ராகுல் 'இம்பாக்ட்' வீரராக களமிறங்கினார். இதனையடுத்து அணியை நிக்கோலஸ் பூரன் வழிநடத்தினார்.

குயின்டன் அபாரம்

லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுல் (15), தேவ்தத் படிக்கல் (9) சோபிக்கவில்லை. ராகுல் சகார் வீசிய 9வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட மார்கஸ் ஸ்டாய்னிஸ் (19) ஆறுதல் தந்தார். பொறுப்பாக விளையாடிய குயின்டன் டி காக், ஹர்ஷல் படேல், ரபாடா பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்தார். மறுமுனையில் அசத்திய கேப்டன் பூரன், ராகுல் சகார் வீசிய 12வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 20 ரன் கிடைத்தது. ஹர்ஷல் படேல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய குயின்டன் 34 பந்தில் அரைசதம் கடந்தார்.

குர்னால் நம்பிக்கை

நான்காவது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த போது அர்ஷ்தீப் சிங் பந்தில் குயின்டன் (54) அவுட்டானார். ரபாடா 'வேகத்தில்' பூரன் (42) போல்டானார். அபாரமாக ஆடிய குர்னால் பாண்ட்யா, ஹர்ஷல் படேல் வீசிய 18வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். கர்ரான் வீசிய 19வது ஓவரில் ஆயுஷ் படோனி (8), ரவி பிஷ்னோய் (0) அடுத்தடுத்து அவுட்டாகினர்.

லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 199 ரன் எடுத்தது. குர்னால் (43) அவுட்டாகாமல் இருந்தார்.

தவான் விளாசல்

சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ் ஜோடி கலக்கல் துவக்கம் கொடுத்தது. நவீன் உல்-ஹக் பந்தில் 2 பவுண்டரி அடித்த பேர்ஸ்டோவ், மோசின் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். சித்தார்த், மோசின் கான் வீசிய 3, 6வது ஓவரில் தலா 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் தவான். ரவி பிஷ்னோய் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தவான் 30 பந்தில் அரைசதம் எட்டினார். தொடர்ந்து அசத்திய பேர்ஸ்டோவ், குர்னால் பாண்ட்யா பந்தில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 102 ரன் சேர்த்த போது மயங்க் யாதவ் பந்தில் பேர்ஸ்டோவ் (42) அவுட்டானார்.

மயங்க் 'வேகம்'

மணிக்கு 156 கி.மீ., வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ் பந்தில் பிரப்சிம்ரன் சிங் (19), ஜிதேஷ் சர்மா (6) சரணடைந்தனர். மோசின் கான் வீசிய 17வது ஓவரில் தவான் (70), சாம் கர்ரான் (0) அடுத்தடுத்து வெளியேற பஞ்சாப்பின் வெற்றி வாய்ப்பு மங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 41 ரன் தேவைப்பட்டன. நவீன் உல்-ஹக் பந்துவீசினார். இந்த ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன் மட்டும் கிடைத்தது.

பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 178 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. லிவிங்ஸ்டன் (28), ஷசாங்க் சிங் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

199 ரன்

பஞ்சாப் அணிக்கு எதிராக 199 ரன் குவித்த லக்னோ அணி, ஐ.பி.எல்., அரங்கில் லக்னோவில் நடந்த போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 2023ல் டில்லி அணிக்கு எதிராக இங்கு நடந்த போட்டியில் லக்னோ அணி 193/6 ரன் எடுத்திருந்தது.
* இது, லக்னோ அணியின் 3வது அதிகபட்ச ஸ்கோரானது. ஏற்கனவே பஞ்சாப் (257/5, மொகாலி, 2023), கோல்கட்டா (210/0, மும்பை, 2022) அணிகளுக்கு எதிராக அதிக ரன் குவித்திருந்தது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us