சென்னைக்கு 'நோ' சொன்ன லக்னோ: 'செக்' வைத்தார் மிட்சல் மார்ஷ்
சென்னைக்கு 'நோ' சொன்ன லக்னோ: 'செக்' வைத்தார் மிட்சல் மார்ஷ்
ADDED : மே 15, 2026 11:42 PM

லக்னோ: லக்னோ அணியின் மிட்சல் மார்ஷ் 38 பந்தில் 90 ரன் விளாச, சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று லக்னோ, வாஜ்பாய் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
கார்த்திக் அரைசதம்: சென்னை அணியின் 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ஏமாற்றினர். ஆகாஷ் சிங் 'வேகத்தில்' முதலில் கேப்டன் ருதுராஜ் (13) வீழ்ந்தார். தொடர்ந்து மிரட்டிய ஆகாஷ் பந்தில் சாம்சன் (20), உர்வில் படேல் (6) அவுட்டாக, 7.2 ஓவரில் 52/3 ரன் எடுத்து தத்தளித்து. பின் பிரவிஸ், கார்த்திக் சர்மா விவேகமாக விளையாடினர். பிரின்ஸ் யாதவ் ஓவரில் வரிசையாக இரு சிக்சர் விளாசினார் கார்த்திக். தொடர்ந்து ஷமி பந்தை சிக்சருக்கு அனுப்பி, அரைசதம் கடந்தார். ஷமியின் அடுத்த பந்தில் பிரவிஸ் (25) கிளம்பினார். ஷாபாஸ் ஓவரின் (16வது) முதல் 3 பந்துகளில் 6,4,4 என விளாசிய கார்த்திக் (71 ரன், 42 பந்து, 6x4, 5x6), 6வது பந்தில் அவுட்டானார்.
துபே விளாசல்: பிரின்ஸ் வீசிய கடைசி ஓவரில் ஷிவம் துபே 6,4,4,6 என அடித்து நொறுக்க, மொத்தம் 23 ரன் கிடைத்தன. சென்னை அணி 20 ஓவரில் 187/5 ரன் எடுத்தது. ஷிவம் துபே (32), பிரஷாந்த் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.
மார்ஷ் மிரட்டல்: சவாலான இலக்கை விரட்டிய லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ் அதிரடி துவக்கம் கொடுத்தனர். சென்னை பவுலர்கள் சொதப்ப, எளிதாக ரன் எடுத்தனர். கம்போஜ் ஓவரில் மார்ஷ் வரிசையாக 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 28 ரன் எடுக்கப்பட்டன. தொடர்ந்து ஸ்பென்சர் ஜான்சன் ஓவரில் 4,4,6 என விளாசிய மார்ஷ், 21 பந்தில் அரைசதம் எட்டினார். முகேஷ் சவுத்ரி ஓவரின் (12வது) 4வது பந்தில் இங்லிஸ் (36) வெளியேறினார். 5வது பந்தில் ரன் அவுட்டான மார்ஷ் (90 ரன், 38 பந்து, 9x4, 7x6) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அப்துல் சமது (7) நிலைக்கவில்லை. கம்போஜ் ஓவரில் வரிசையாக நான்கு சிக்சர் பறக்கவிட்ட பூரன், தொடர்ந்து நான்காவது வெற்றி பெறும் சென்னை கனவுக்கு 'நோ' சொன்னார். லக்னோ அணி 16.4 ஓவரில் 188/3 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. பூரன் (32), முகுல் சவுத்ரி (13) அவுட்டாகாமல் இருந்தனர்.
'பிளே-ஆப்' எப்படி
சென்னை அணி, மீதமுள்ள 2 போட்டியிலும் (எதிர்: ஐதராபாத், குஜராத்) வென்றால், 16 புள்ளி கிடைக்கும். பின், மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்து, 'ரன்-ரேட்' அடிப்படையில் 'பிளே-ஆப்' வாய்ப்பு பெறலாம்.
நெருப்பாக 'அக்கி'
ராஜஸ்தானை சேர்ந்தவர் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் சிங், 24. நேற்று லக்னோ அணிக்காக இந்த சீசனில் முதல் போட்டியில் பங்கேற்றார். பந்தை நன்கு 'ஸ்விங்' செய்த இவர், தரமான 'பவுன்சர்' வீசினார். தொடர்ந்து 4 ஓவர் வீசி, சென்னை அணியின் 'டாப்-ஆர்டரை' தகர்த்தார். மொத்தம் 3 விக்கெட் (4-0-26-3) சாய்த்தார். ஒவ்வொரு முறை விக்கெட் வீழ்த்தியதும், தனது 'பாக்கெட்டில்' இருந்து சிறிய 'பேப்பரை' எடுத்து காண்பித்து மகிழ்ந்தார். அதில் 'நெருப்பாக அக்கி (செல்ல பெயர்)...'டி-20' போட்டியில் எப்படி விக்கெட் வீழ்த்த வேண்டும் என ஆகாஷ் சிங்கிற்கு தெரியும்,' என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
அஞ்சலி
உ.பி., புயலில் மரணமடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, போட்டி துவங்குவதற்கு முன் மைதானத்தில் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இரு அணி வீரர்களும் தங்களது கையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.
