ADDED : மார் 31, 2024 11:38 PM

லக்னோ: இந்தியாவின் புதிய 'வேகப்புயலாக' உருவெடுத்துள்ளார் இளம் மயங்க் யாதவ். மணிக்கு 155.8 கி.மீ., வேகத்தில் பந்துவீசி மிரட்டுகிறார்.
லக்னோவில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில், லக்னோ அணி(199/8), பஞ்சாப்பை(178/5) வீழ்த்தியது. ஒருகட்டத்தில் பஞ்சாப் அணி 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 101 ரன் எடுத்து வலுவாக இருந்தது. இந்த தருணத்தில் லக்னோவின் அறிமுக வீரர் மயங்க் யாதவ் திருப்பம் ஏற்படுத்தினார். அசுரவேகத்தில் பந்துவீசிய இவர், பேர்ஸ்டோவ் உட்பட 3 விக்கெட் வீழ்த்தி, ஆட்டநாயகனாக ஜொலித்தார். தனது 2வது ஓவரின் முதல் பந்தை மணிக்கு 155.8 கி.மீ., வேகத்தில் வீசினார். இது, இந்த ஐ.பி.எல்., தொடரின் அதிவேக பந்துவீச்சாக அமைந்தது. இவர் வீசிய 24 பந்துகளில், 9 பந்துகள் மணிக்கு 150+ கி.மீ., வேகத்தை தொட்டன.
உயரமான வீரர்
டில்லியை சேர்ந்தவர் மயங்க் யாதவ், 21. இவரது தந்தை, டில்லியில் சிறிய எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தியுள்ளார். ஆரம்ப காலத்தில் மயங்க் நல்ல 'ஷூ' கூட இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். 14 வயதில் டில்லி சானட் கிரிக்கெட் கிளப்பில் பட்டை தீட்டப்பட்டார். 2022ல் நடந்த ஐ.பி.எல்., ஏலத்தில் இவரை லக்னோ அணி ரூ. 20 லட்சத்திற்கு வாங்கியது. கடந்த ஆண்டு தொடை பகுதி காயம் காரணமாக விளையாட முடியவில்லை. இம்முறை கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். 6.1 அடி உயரம் கொண்ட மயங்க், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பான் அம்புரோஸ், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் போல 'வேகத்தில்' அசத்த ஆசைப்படுகிறார்.
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் பவுலர் ஸ்டைன் கூறுகையில்,''இத்தனை நாள் எங்கு மறைந்திருந்தாய் மயங்க் யாதவ். மணிக்கு 155.8 கி.மீ., வேகத்தில் பந்துவீசியது பிரமாதம்,''என்றார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் 'வேகப்புயல்' பிரட் லீ கூறுகையில்,''இந்தியா தனது அதிவேக பவுலரை கண்டுபிடித்துள்ளது. அவர் தான் மயங்க் யாதவ். அசுர வேகத்தில் பந்துவீசுகிறார். என்னை பெரிதும் கவர்ந்துள்ளார்,'' என்றார்.
கிருஷ்ண பக்தர்
மயங்க் தந்தை பிரபு யாதவ் கூறுகையில்,''சைவ உணவுகளை மட்டும் மயங்க் சாப்பிடுவார். பகவான் கிருஷ்ணர் மீது பக்தி கொண்டவர். எனது மகன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, நாட்டுக்காக 15 ஆண்டுகள் விளையாட வேண்டும். கடவுள் ஆசியுடன் கிரிக்கெட்டில் தடம் பதிப்பார்,''என்றார்.
