மும்பை வலுவான முன்னிலை: ரஞ்சி கோப்பை பைனலில் ஆதிக்கம்
மும்பை வலுவான முன்னிலை: ரஞ்சி கோப்பை பைனலில் ஆதிக்கம்
ADDED : மார் 11, 2024 11:00 PM

மும்பை: விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில் முஷீர் கான், ரகானே அரைசதம் கடந்து கைகொடுக்க மும்பை அணி வலுவான முன்னிலை பெற்றது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கும் பைனலில் விதர்பா, மும்பை அணிகள் விளையாடுகின்றன. மும்பை அணி முதல் இன்னிங்சில் 224 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 31/3 ரன் எடுத்திருந்தது. அதர்வா (21) அவுட்டாகாமல் இருந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் விதர்பா அணிக்கு மும்பை பவுலர்கள் தொல்லை தந்தனர். தவால் குல்கர்னி 'வேகத்தில்' அதர்வா (23) வெளியேறினார். ஷாம்ஸ் முலானி 'சுழலில்' ஆதித்யா (19), கேப்டன் அக்சய் (5), ஹர்ஷ் துபே (1) சிக்கினர். தனுஷ் பந்தில் யாஷ் ரத்தோடு (27), யாஷ் தாகூர் (16), உமேஷ் யாதவ் (2) அவுட்டாகினர்.
விதர்பா அணி முதல் இன்னிங்சில் 105 ரன்னுக்கு சுருண்டது. மும்பை சார்பில் தவால் குல்கர்னி, ஷாம்ஸ் முலானி, தனுஷ் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
ரகானே அரைசதம்
பின் 2வது இன்னிங்சை துவக்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா (11), பூபன் லால்வானி (18) சுமாரான துவக்கம் தந்தனர். பின் இணைந்த முஷீர் கான், கேப்டன் அஜின்கியா ரகானே அரைசதம் கடந்தனர். ஆட்டநேர முடிவில் மும்பை அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்து 260 ரன் முன்னிலை பெற்றிருந்தது. முஷீர் (51), ரகானே (58) அவுட்டாகாமல் இருந்தனர்.
