/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அடுத்த தோனி: கவாஸ்கர் பாராட்டு
/
அடுத்த தோனி: கவாஸ்கர் பாராட்டு
ADDED : பிப் 25, 2024 11:26 PM

ராஞ்சி டெஸ்டில் 90 ரன் எடுத்த விக்கெட் கீப்பர் துருவ் ஜுரலை, இந்திய அணியின் 'அடுத்த தோனி' என ஜாம்பவான் கவாஸ்கர் பாராட்டினார். தோனியை போல 'கூலாக' ஆடிய இவர், 'டெயிலெண்டர்'கள் உதவியுடன் கவுரவமிக்க ஸ்கோரை பெற்று தந்தார்.
உ.பி.,யை சேர்ந்தவர் ஜுரல், 23. தனது 13வது வயதில் சொந்த ஊரான ஆக்ராவில் இருந்து தனியாக புறப்பட்டு நொய்டாவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி அகாடமிக்கு சென்றிருக்கிறார். பயிற்சியாளர் பூல் சந்த் கூறுகையில்,''பெற்றோர் உதவி இல்லாமல் தனியாக வந்த போதே ஜுரல் தனித் திறமை வாய்ந்தவர் என்பதை புரிந்து கொண்டேன்,''என்றார்.
ஜுரல் தந்தை நேம் சிங், கார்கில் போரில் ஈடுபட்டவர். ஹாவில்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கிரிக்கெட் உபகரணம் வாங்க ரூ, 6,000 கேட்டுள்ளார் ஜுரல். 'பணம் இல்லை. கிரிக்கெட்டை விட்டுவிடு' என தந்தை அறிவுறுத்தியுள்ளார். பின் இவரது அம்மா தனது நகையை அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் முன்னேற்றம் கண்ட இவர், ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
840 பந்து பயிற்சி
ராஜஸ்தான் அணியின் செயல் இயக்குநர் ஜூபின் பருச்சா கூறுகையில்,''டெஸ்ட் தொடருக்கு முன் புனேயில் உள்ள ராஜஸ்தான் அணியின் பயிற்சி அகாடமிக்கு வந்தார் ஜுரல். அங்கு அனைத்துவிதமான ஆடுகளம், ரப்பர், டென்னிஸ், கிரிக்கெட் என பலவிதமான பந்துகளில் பேட்டிங் பயிற்சி கொண்டார். இவருக்கு 14 வீரர்கள் பல்வேறு விதத்தில் பந்துவீசினர். ஒருநாளில் 140 ஓவர் அல்லது 840 பந்துகளை சந்தித்து கடின பயற்சி மேற்கொண்டார். இது ராஞ்சி போட்டியில் சாதிக்க உதவியது,''என்றார்.