ADDED : பிப் 09, 2024 10:55 PM

பல்லேகெலே: ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் ஆனார் நிசங்கா.
இலங்கை சென்ற ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. பல்லேகெலேயில் நேற்று நடந்த முதல் போட்டியில் 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.
சூப்பர் ஜோடி
இலங்கை அணிக்கு பதும் நிசங்கா, அவிஷ்கா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 182 ரன் சேர்த்த போது அவிஷ்கா (88) அவுட்டானார். 88 வது பந்தில் நிசங்கா, தனது 4வது ஒருநாள் சதம் அடித்தார். குசல் மெண்டிஸ் (16) நிலைக்கவில்லை.
தொடர்ந்து வேகமாக ரன் சேர்த்த நிசங்கா, பரூக்கி வீசிய 47வது ஓவரில் 1 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 19 ரன் எடுத்தார்.
சமரவிக்ரமா 45 ரன்னில் திரும்பினார். பரீத் அகமது கடைசி ஓவர் வீசினார். இதன் 2வது பந்தில் பவுண்டரி அடித்த நிசங்கா, ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஆனார். இலங்கை அணி 50 ஓவரில் 381/3 ரன் குவித்தது. நிசங்கா (210 ரன், 139 பந்து, 20 பவுண்டரி, 8 சிக்சர்), அசலங்கா (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் 'டாப்-4' பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் திரும்ப, 27/4 என திணறியது. குல்பதீன் 16 ரன் எடுத்தார். அஸ்மதுல்லா, முகமது நபி சதம் (136) விளாசிய போதும் வெற்றிக்கு போதவில்லை. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 339/6 ரன் எடுத்தது. 42 ரன்னில் வெற்றி பெற்ற இலங்கை அணி, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. அஸ்மதுல்லா (149), இக்ரம் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
210
முதல் இரட்டை சதம் அடித்த நிசங்கா (210), ஒருநாள் அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த இலங்கை வீரர் ஆனார். முன்னதாக ஜெயசூர்யா, 189 ரன் (எதிர்-இந்தியா, 2000) எடுத்ததே அதிகமாக இருந்தது.
* ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 10 வது வீரர் ஆனார்.
கெய்ல், சேவக்கை முந்தினார்
ஒருநாள் அரங்கில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர்களில் கெய்ல் (138 பந்து, வெஸ்ட் இண்டீஸ்), சேவக்கை (140, இந்தியா) முந்திய நிசங்கா மூன்றாவது இடம் பிடித்தார். இவர் 136 பந்தில் இரட்டை சதம் அடித்தார். முதல் இரு இடத்தில் இந்தியாவின் இஷான் கிஷான் (126 பந்து, எதிர்-வங்கதேசம்), ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (128, எதிர்-ஆப்கன்) உள்ளனர்.
