UPDATED : நவ 30, 2024 03:27 PM
ADDED : நவ 29, 2024 10:32 PM

கான்பெரா: இந்தியா, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழையால் ரத்தானது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்--கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. அடிலெய்டில் வரும் டிச. 6-10ல், இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக ('பிங்க்பால்') நடக்க உள்ளது.
இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன், இரண்டு நாள் பகலிரவு பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. இப்போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று துவங்க இருந்தது. ஆனால் கனமழை காரணமாக 'டாஸ்' கூட போடாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
நாளை நடக்கவுள்ள இரண்டாம் நாள் ஆட்டம், தலா 50 ஓவர் கொண்ட போட்டியாக நடத்த இரு அணிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

