ADDED : ஜூலை 24, 2025 11:42 PM

மான்செஸ்ட்: ரிஷாப் பன்ட் காயம் அடைவது தொடர்கிறது. 2022ல் கார் விபத்தில் சிக்கிய இவருக்கு வலது முழங்காலில் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது. இதிலிருந்த மீண்ட இவர், இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றார். லார்ட்ஸ் டெஸ்டில் இவரது இடது கை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது.
மான்செஸ்டர் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் வோக்ஸ் வீசிய பந்தை 'ரிவர்ஸ் ஸ்வீப்' செய்ய முயன்றார் ரிஷாப். அப்போது வலது கால் பாதத்தில் பந்து பலமாக தாக்கியது. சுண்டு விரல் அருகே வீக்கம் ஏற்பட்டு, ரத்தம் வந்தது. இதனால் 'கோல்ப்' போட்டியில் பயன்படுத்தப்படும் சிறிய வாகனத்தின் மூலம் 'பெவிலியன்' திரும்பினார். 'ஆம்புலன்சில்' மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 'ஸ்கேன்' பரிசோதனையில் கணுக்கால்-பாதம் வரை உள்ள 5 விரல் எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அடுத்த 6 மாதங்களுக்கு 'ரெஸ்ட்' எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக நேற்று ஷர்துல் அவுட்டான நிலையில் ரிஷாப் களமிறங்கி அதிர்ச்சி தந்தார். 'டிரஸ்சிங் ரூமில்' இருந்து மைதானம் வர இவர் படிகளில் இறங்கிய போது, ரசிகர்கள் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர். அப்போது இந்தியா 314/6 என்ற நிலையில் இருந்தது. பாதுகாப்புக்காக வலது காலில் விண்வெளி வீரர்கள் அணிவது போல 'மூன் பூட்' எனப்படும் ஷூ அணிந்திருந்தார். வலியை பொருட்படுத்தாமல் ஆர்ச்சர் பந்தில் சிக்சர் என அதிரடியாக ரன் சேர்த்தார். முதல் நாளில் 37 ரன்னில் 'ரிட்டையர்டு ஹர்ட்' ஆன இவர், அரைசதம் கடந்தார். இந்தியா 358 ரன்னை எட்ட உதவியாக இருந்தார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறுகையில்,''நாட்டுக்காக வலியை கடந்து அரைசதம் அடித்தார் ரிஷாப் பன்ட். இவரது துணிச்சலான ஆட்டம் நீண்ட காலம் நினைவில் இருக்கும்,''என்றார்.
வருகிறார் ஜெகதீசன்
இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்ட செய்தியில் 'எஞ்சிய போட்டியில் ரிஷாப் பன்ட் கீப்பிங் செய்ய மாட்டார். அணியின் நலன் கருதி பேட்டிங் செய்வார். துருவ் ஜூரல் விக்கெட்கீப்பராக செய்ல்படுவார் ' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் முழங்கால் காயத்தால் விலகினார். ஆகாஷ் தீப் (இடுப்பு பகுதி), அர்ஷ்தீப் சிங் (விரல் காயம்) காயத்தால் அவதிப்படுகின்றனர். அடுத்த டெஸ்டில் ரிஷாப் இடம் பெறுவது கடினம். இஷான் கிஷானும் காயத்தால் அவதிப்படுவதால், தமிழக விக்கெட் கீப்பர் ஜெகதீசன் விரைவில் இங்கிலாந்து செல்ல உள்ளார்.
கும்ளே போல
ஆன்டிகுவா டெஸ்டில் (2002) வெஸ்ட் இண்டீசின் மெர்வின் தில்லான் வீசிய 'பவுன்சர்' பந்து தாக்கியதில் இந்தியாவின் கும்ளேவுக்கு தாடை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வாயில் இருந்து ரத்தம் கொட்டியது. இதை பொருட்படுத்தாது 20 நிமிடம் பேட் செய்தார். தாடை பகுதிக்கு 'ஆப்பரேஷன்' செய்ய இந்தியா திரும்புவார் என எதிர்பார்த்தனர். ஆனால், 'பேண்டேஜ்' அணிந்து தொடர்ந்து 14 ஓவர் பந்துவீசி, லாராவின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார். இவரை போல ரிஷாப் பன்ட்டும் துணிச்சல் வீரனாக திகழ்கிறார்.