ADDED : ஜன 25, 2026 11:32 PM

புவனேஸ்வர்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் அசத்திய தமிழக அணி 207 ரன் வித்தியாசத்தில் ஒடிசா அணியை வீழத்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்தியாவில், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 91வது சீசன் நடக்கிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஒடிசா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 286, ஒடிசா 148 ரன் எடுத்தன. தமிழக அணி 2வது இன்னிங்சில் 316 ரன் எடுத்தது. பின், 455 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஒடிசா அணி, 3ம் நாள் முடிவில் 47/2 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் ஒடிசா அணிக்கு அனில் பரிதா (98), கேப்டன் சுப்ரான்ஷு சேனாபதி (55) கைகொடுத்தனர். கோவிந்த போத்தார் (27), ராஜேஷ் மொகந்தி (30) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற ஒடிசா அணி 2வது இன்னிங்சில் 247 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. தமிழகம் சார்பில் சோனு யாதவ், வித்யுத், சாய் கிஷோர், நிதிஷ் ராஜகோபால் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை சோனு யாதவ் வென்றார்.
'ஏ' பிரிவில் இதுவரை விளையாடிய 6 போட்டியில், ஒரு வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி என, 11 புள்ளிகளுடன் தமிழக அணி 6வது இடத்தில் உள்ளது.

