ADDED : ஜன 25, 2026 11:35 PM

திண்டுக்கல்: சி.கே. நாயுடு கோப்பை லீக் போட்டியில், 5 விக்கெட்டை பறிகொடுத்த தமிழக அணி தடுமாறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், சி.கே. நாயுடு கோப்பை (23 வயது) தொடருக்கான லீக் போட்டி நடக்கிறது. இதில் தமிழகம், ஆந்திரா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் ஆந்திரா 221, தமிழகம் 288 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் ஆந்திரா அணி 2வது இன்னிங்சில் 82/2 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெங்கட ராகுல் (66), பிரசாத் (21) கைகொடுக்க, ஆந்திரா அணி 2வது இன்னிங்சில் 224 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் விக்னேஷ் 4, மானவ் பராக் 3, சச்சின் ரதி 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின், 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணிக்கு அமித் சாத்விக் (9), கிரண் கார்த்திகேயன் (4), கேப்டன் பூபதி (1), மானவ் பராக் (8), ஜெயந்த் (6) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் தமிழக அணி 2வது இன்னிங்சில் 98/5 ரன் எடுத்து, 60 ரன் பின்தங்கி இருந்தது. மாதவ பிரசாத் (49), விக்னேஷ் (16) அவுட்டாகாமல் இருந்தனர். ஆந்திரா சார்பில் சுமித், சித்து கார்த்திக் ரெட்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
கடைசி நாளில் தமிழக பேட்டர்கள் பொறுப்பாக விளையாடினால் வெற்றி பெறலாம்.
