ADDED : ஜன 26, 2025 09:39 PM

சேலம்: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் அசத்திய தமிழக அணி 209 ரன் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தியது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. சேலத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், சண்டிகர் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 301, சண்டிகர் 204 ரன் எடுத்தன. தமிழக அணி 2வது இன்னிங்சில் 305/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. பின் 403 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் விளையாடிய சண்டிகர் அணி, 3ம் நாள் முடிவில் 113/5 ரன் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டத்தில் அஜித் ராம் பந்தில் விஷு காஷ்யப் (4), அபிஷேக் சைனி (1) அவுட்டாகினர். சாய் கிஷோர் 'சுழலில்' மயங்க் சித்து (8), ஜக்ஜித் சிங் (5) சிக்கினர். கேப்டன் மனன் வோரா சதம் விளாசினார். சண்டிகர் அணி 2வது இன்னிங்சில் 193 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. வோரா (100) அவுட்டாகாமல் இருந்தார்.
தமிழகம் சார்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட் சாய்த்தனர்.
இரண்டாவது இன்னிங்சில் 150* ரன் விளாசிய தமிழகத்தின் விஜய் சங்கர், ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஆறு போட்டியில், 3 வெற்றி, 3 'டிரா' என 25 புள்ளிகளுடன் தமிழக அணி 'டி' பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது. சண்டிகர் அணி (19 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.