ADDED : மார் 14, 2024 10:30 PM

மும்பை: ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி 42வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 169 ரன் வித்தியாசத்தில் விதர்பாவை வீழ்த்தியது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடந்தது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த பைனலில் விதர்பா, மும்பை அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 224, விதர்பா 105 ரன் எடுத்தன. மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன் குவித்தது.
பின் 538 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய விதர்பா அணி 4ம் நாள் முடிவில் 248/5 ரன் எடுத்திருந்தது.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இன்னும் 290 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய விதர்பா அணிக்கு கேப்டன் அக்சய் (102), ஹர்ஷ் துபே (65) போராடினர். ஆதித்யா (3), யாஷ் தாகூர் (6), உமேஷ் யாதவ் (6) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். விதர்பா அணி 2வது இன்னிங்சில் 368 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது.
மும்பை அணி சார்பில் தனுஷ் 4, துஷார் தேஷ்பாண்டே, முஷீர் கான் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
எட்டு ஆண்டுகளுக்கு பின்
இந்த வெற்றியின்மூலம் மும்பை அணி 8 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி கோப்பை வென்றது. கடைசியாக 2016ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதுவரை 48 முறை ரஞ்சி கோப்பை பைனலில் விளையாடிய மும்பை அணி 42வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆட்ட நாயகன் விருதை மும்பையின் முஷீர் கான் (136 ரன், 2 விக்கெட்) வென்றார். தொடர் நாயகன் விருதை மும்பையின் தனுஷ் (502 ரன், 29 விக்கெட்) தட்டிச் சென்றார்.
குல்கர்னி ஓய்வு
மும்பை அணி வேகப்பந்துவீச்சாளர் தவால் குல்கர்னி 35, முதல் தர போட்டியில் இருந்து வெற்றியுடன் விடை பெற்றார். கடந்த 2008ல் முதல் தர போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 95 போட்டியில் 281 விக்கெட் சாய்த்துள்ளார். இதில் 15 முறை, ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்தினார். இவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஸ்ரேயாஸ் காயம்
ரஞ்சி கோப்பை பைனலின் 2வது இன்னிங்சில் 95 ரன் விளாசிய மும்பை அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், 3ம் நாள் ஆட்டத்தில் இரண்டு முறை முதுகுப்பகுதி காயத்துக்கு முதலுதவி எடுத்துக் கொண்டார். இதனால் இவர் 4, 5ம் நாள் ஆட்டத்தில் 'பீல்டிங்' செய்யவில்லை. இவருக்கு 'ஸ்கேன்' எடுக்கப்பட்டது. இதன் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒருவேளை காயத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தால் 17வது ஐ.பி.எல்., தொடரில் முதல் ஒரு சில போட்டிகளில் கோல்கட்டா அணிக்காக இவர் பங்கேற்பது சந்தேகம்.
