உலக கோப்பை வெல்ல 'ரெடி': ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
உலக கோப்பை வெல்ல 'ரெடி': ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
ADDED : மார் 25, 2026 10:33 PM

புதுடில்லி: ''வரும் 'டி-20' உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு, உலக சாம்பியன் பட்டம் வெல்ல முயற்சிப்போம்,'' என, இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்தார்.
இங்கிலாந்து, வேல்சில், பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (ஜூன் 12 - ஜூலை 5) நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவில் 5 போட்டிகள் (ஏப். 17, 19, 22, 25, 27) கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது.
கடந்த ஆண்டு நவி மும்பையில் நடந்த ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றி, 'டி-20' உலக கோப்பையிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ''எந்த துறையாக இருந்தாலும், சிறப்பான ஒன்றை செய்தால் மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். இல்லை என்றால் கடின உழைப்பு வீணாகிவிட்டது போல தோன்றும். கடந்த ஆண்டு உலக கோப்பை வென்றதால், எங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்தொடரில் கிடைத்த அனுபவம், உலகின் எந்த பகுதியிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. 'டி-20' உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் வெல்ல முயற்சிப்போம்,'' என்றார்.
