/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பும்ராவுக்கு ஓய்வு * மீண்டும் வருகிறார் ராகுல்
/
பும்ராவுக்கு ஓய்வு * மீண்டும் வருகிறார் ராகுல்
ADDED : பிப் 19, 2024 10:54 PM

ராஜ்கோட்: ராஞ்சி டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு தரப்பட உள்ளது. காயத்தில் இருந்து மீண்ட ராகுல், மீண்டும் களமிறங்கி காத்திருக்கிறார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டில் பங்கேற்ற இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, மொத்தம் 80.5 ஓவர் பந்து வீசினார். 17 விக்கெட் சாய்த்தார்.
இவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் ராஞ்சியில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்டில் (பிப். 23-27) பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளது.
காரணம் ஏன்
ராஞ்சி டெஸ்டில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றலாம். ஒருவேளை சாதகமான முடிவு இல்லை என்றால், கடைசி, ஐந்தாவது டெஸ்ட் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்படும். வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம் கொண்ட தர்மசாலாவில் கடைசி டெஸ்ட் நடப்பதால், பும்ரா கட்டாயம் பங்கேற்க வேண்டியது இருக்கும்.
ஏற்கனவே முகமது சிராஜுக்கு இரண்டாவது டெஸ்டில் ஓய்வு தரப்பட்டது. புத்துணர்ச்சியுடன் மீண்டும் வந்த இவர், ராஜ்கோட்டில் சிறப்பாக செயல்பட்டார். இது போல பும்ராவுக்கும் தற்போது ஓய்வு தரப்படலாம்.
ராகுல் வருகை
முதல் டெஸ்டில் 86, 22 ரன் எடுத்து கைகொடுத்த ராகுல், வலது தொடைப்பகுதி காயத்தால் அடுத்த இரு டெஸ்டில் பங்கேற்கவில்லை. தற்போது 90 சதவீதம் இவர் 'பிட்னஸ்' பெற்றுள்ளார். அடுத்த டெஸ்ட் துவங்கும் முன், முழு உடற்தகுதி பெற்று, போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் ஒருவர் கூறுகையில்,'' நான்காவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியினர் இன்று ராஞ்சி செல்கின்றனர். இதில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு தரப்படலாம். இதேபோல ராகுல் மீண்டும் களமிறங்குவார்,'' என, தெரிவித்துள்ளார்.

