ADDED : நவ 03, 2024 11:08 PM

மும்பை: அஜாஸ் படேல் (22வது) ஓவரில் ரிஷாப் பன்ட் இரண்டு பவுண்டரி அடிக்க, இந்தியா 106/6 என்ற நிலையை எட்டியது. வெற்றிக்கு 41 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அணியை ரிஷாப், கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஓவரின் 4வது பந்தை ரிஷாப் தடுத்து ஆட முயன்றார். அப்போது அவரது கால் பேடில் உரசிய பந்து, கீப்பர் பிளண்டல் கையில் தஞ்சம் புகுந்தது. உடனே நியூசிலாந்து வீரர்கள் 'அப்பீல்' செய்தனர். பந்து, பேட்டில் பட்டதா அல்லது ரிஷாப் கால் பேடில் பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது.
கள அம்பயர் நிராகரிக்க, 'ரிவியு' கேட்டனர். இதை ஆய்வு செய்த 'டிவி' அம்பயர் பால் ரீபல் (ஆஸி.,) அவுட் கொடுத்து அதிர்ச்சி தந்தார். தனது கால் பேடில் தான் பந்து பட்டது என கள அம்பயரிடம் பன்ட் கூறினார். இறுதியில் களத்தை விட்டு வெளியேறினார். இந்த சர்ச்சைக்குரிய அவுட், போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''ரீப்ளே திருப்தியாக இல்லாத நிலையில், கள அம்பயரின் முடிவை ஏற்க வேண்டும். ரிஷாப் விஷயத்தில் கள அம்பயர் கொடுத்த 'நாட் அவுட்'டை எப்படி மாற்றினார்கள் என தெரியவில்லை,''என்றார்.
தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிவிலியர்ஸ் கூறுகையில்,''மும்பை டெஸ்டின் முக்கியமான கட்டத்தில் சர்ச்சை ஏற்பட்டது கவலை அளிக்கிறது. பந்து, பேட்டை கடந்து செல்லும் அதே நேரத்தில் பேட்டர் கால் பேடு மீதும் பட்டால், 'ஸ்னிக்கோமீட்டர்' எந்த சத்தத்தை பதிவு செய்யும் என தெரியவில்லை. 'ஹாட்ஸ்பாட்' தொழில்நுட்பம் எங்கே போனது,'' என கேள்வி எழுப்பினார்.
யார் காரணம்
டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் ரோகித் (3 போட்டி, 91 ரன், சராசரி 15.16), சீனியர் பேட்டர் கோலி (3 போட்டி, 93 ரன், சராசரி 15.50) சோபிக்காதது முக்கிய காரணம். கோலி ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தலைமை பயிற்சியாளர் காம்பிர் வியூகமும் எடுபடவில்லை. இவரது வருகைக்கு பின் இலங்கை மண்ணில் 27 ஆண்டுக்கு பின் ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் (பெங்களூரு) 36 ஆண்டுக்கு பின் தோல்வியை சந்தித்தது. இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 12 ஆண்டுகளுக்கு பின் இழந்தது. டெஸ்ட் வரலாற்றில், 3 போட்டி கொண்ட தொடரில் முதல் முறையாக நேற்று 'ஒயிட் வாஷ்' ஆனது. இதனால் காம்பிருக்கு பதில், டெஸ்ட் அணிக்கு லட்சுமணை பயிற்சியாளராக நியமிக்கலாம் என 'நெட்டிசன்'கள் கருத்து தெரிவித்துள்ளனர்.