ADDED : மே 11, 2024 11:28 PM

புதுடில்லி: டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட்டிற்கு ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
ஐ.பி.எல்., விதிமுறைப்படி ஓவருக்கு 4.25 நிமிடம் வீதம், 20 ஓவரை 85 நிமிடங்களில் வீச வேண்டும். இதை பின்பற்ற முடியாமல் டில்லி அணி தவிக்கிறது.
ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் (டில்லி ஜெட்லி மைதானம், மே 7) 20 ஓவரை வீச, 117.82 நிமிடம் எடுத்துக் கொண்டது. இது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட 30 நிமிடங்களுக்கு மேல் அதிகம். ஏற்கனவே சென்னை (மார்ச் 31), கோல்கட்டாவுக்கு (ஏப்.3) எதிரான போட்டியிலும் தாமதமாக பந்துவீசியது. மூன்று முறை குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியதால், ஐ.பி.எல்., நடத்தை விதிமுறைப்படி, டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட்டிற்கு ஒரு போட்டி தடை, ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இவர் இன்று நடக்கும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க முடியாது. மற்ற டில்லி அணியின் 'லெவன்' வீரர்கள் (இம்பேக்ட் வீரர் உட்பட) அனைவருக்கும் ரூ. 12 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
'அப்பீல்' நிராகரிப்பு: 'மேட்ச் ரெப்ரி'களின் இந்த தண்டனையை எதிர்த்து டில்லி அணி நிர்வாம் சார்பில் பி.சி.சி.ஐ., குறை தீர்க்கும் அதிகாரியிடம் 'அப்பீல்' செய்யப்பட்டது. அதில் 'ராஜஸ்தான் வீரர்கள் 13 சிக்சர் அடித்தனர். கேப்டன் சஞ்சு சாம்சனின் சர்ச்சைக்குரிய அவுட் குறித்து முடிவு அறிவிக்க 5-6 நிமிடங்கள் ஆனது. இதனால் தான் தாமதம் ஏற்பட்டது,' என குறிப்பிட்டனர். 'அப்பீல்' நிராகரிக்கப்பட்டது. 'மேட்ச் ரெப்ரி'கள் தீர்ப்பே இறுதியானது. வீரர்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் தடையில் இருந்து ரிஷாப் பன்ட் தப்ப முடியவில்லை.