ADDED : நவ 22, 2026 03:42 PM

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷாப் பன்ட் சதம் விளாச, இந்திய அணி முதல் இன்னிங்சில் 720 ரன் குவித்தது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வெலிங்டனில் நடக்கிறது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 368 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 486/4 ரன் எடுத்திருந்தது. ரிஷாப் பன்ட் (55), கம்போஜ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ரிஷாப் பன்ட் சதம் விளாசினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 68 ரன் சேர்த்த போது அன்ஷுல் கம்போஜ் (38) அவுட்டானார். ரிஷாப் பன்ட் 128 ரன்னில் (6X6, 10X4) ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த துருவ் ஜுரெல் (78) தன்பங்கிற்கு அரைசதம் கடந்து கைகொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் (24), ஆகாஷ் தீப் (13) நிலைக்கவில்லை.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 720/9 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. பும்ரா (7) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து சார்பில் பிலிப்ஸ்3, ரச்சின் ரவிந்திரா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லதாம் (0) ஏமாற்றினார். பின் இணைந்த கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ் ஜோடி ஆறுதல் தந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்த போது நிக்கோல்ஸ் (31) அவுட்டானார். நிதானமாக ஆடிய கான்வே அரைசதம் கடந்தார்.
ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 119/2 ரன் எடுத்து, 233 ரன் பின்தங்கி இருந்தது. கான்வே (59), ரச்சின் ரவிந்திரா (27) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் பும்ரா, பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
