/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'ரோ-கோ' எதிர்காலம்: கேப்டன் சுப்மன் சூசகம்
/
'ரோ-கோ' எதிர்காலம்: கேப்டன் சுப்மன் சூசகம்
ADDED : அக் 26, 2025 11:35 PM

சிட்னி: உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா, விராத் கோலி விளையாடுவரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 'ஹிட்மேன்' ரோகித் சதம், 'கிங்' கோலி அரைசதம் விளாச, இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இவர்கள், 2027ல் தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரிலும் இடம் பெற வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போது 40 வயதை நெருங்கிவிடுவர் என்பது பாதகமான விஷயம்.
இது பற்றி கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்,''இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இத்தொடர் டிச.6ல் முடியும். இதற்கு பின் இருவரது எதிர்காலம் பற்றி முடிவு எடுக்கப்படலாம்,''என்றார்.
இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறுகையில்,''வயது என்பது வெறும் 'நம்பர்' தான். உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோகித், கோலி (செல்லமாக ரோ-கோ) கண்டிப்பாக இடம் பெற வேண்டும். பந்துகள் எகிறும் தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் இவர்களது அனுபவம் கைகொடுக்கும்,''என்றார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் முடிந்த நிலையில் சிட்னி விமான நிலையத்தில் இருந்து இந்தியா புறப்பட்டார் ரோகித் சர்மா. இது தொடர்பான 'போட்டோ'வை சமூகவலைதளத்தில் வெளியிட்ட இவர்,'கடைசியாக ஒரு முறை...சிட்னியில் இருந்து விடைபெறுகிறேன்,'என குறிப்பிட்டுள்ளார். சிட்னியில் தனது கடைசி சர்வதேச போட்டியில் பங்கேற்றதை சொல்கிறாரா அல்லது ஓய்வு முடிவை மறைமுகமாக அறிவிக்கிறாரா என ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

