ரோகித், பும்ரா சந்தேகம்: ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கு
ரோகித், பும்ரா சந்தேகம்: ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கு
ADDED : மே 18, 2026 09:00 PM

கவுகாத்தி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, பும்ரா விளையாடுவது சந்தேகம்.
இந்தியா வரவுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட் (ஜூன் 6-10, புதிய சண்டிகர்), மூன்று ஒருநாள் போட்டிகள் (ஜூன் 14, 17, 20, இடம்: தர்மசாலா, லக்னோ, சென்னை) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணி (மே 19) அறிவிக்கப்பட உள்ளது.
ஒருநாள் தொடருக்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, துவக்க வீரர் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படுவது சந்தேகம். தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வரும் பும்ரா, டெஸ்ட் போட்டிக்கு மட்டும் தேர்வாகலாம். கிரிக்கெட் லீக் தொடரில், தொடையின் பின்பகுதி காயத்தால் பாதிக்கப்பட்ட மும்பை அணியின் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்படலாம். உடற்தகுதியை பொறுத்து ஹர்திக் பாண்ட்யா வாய்ப்பு பெறலாம். மற்றொரு சீனியர் வீரர் விராத் கோலி, மூன்று ஒருநாள் போட்டியிலும் விளையாடுவார்.
ஒருநாள் தொடருக்கு பும்ரா தேர்வு செய்யப்படவில்லை என்றால், சிராஜ், பிரின்ஸ் யாதவ் வாய்ப்பு பெறலாம்.
புஜாராவின் ஓய்வுக்கு பின், டெஸ்ட் அணியின் பேட்டிங் வரிசையில் 3வது இடத்துக்கு சரியான வீரர் கண்டறியப்படவில்லை. தமிழகத்தின் சாய் சுதர்சன் கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். இம்முறை 3வது இடத்துக்கு தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்படலாம். ரஞ்சி கோப்பையில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக 60 விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் அகிப் நபி, டெஸ்ட் அணியில் இடம் பெறலாம்.
