/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
துவக்க வீரராக ரோகித் சர்மா: கவாஸ்கர், ரவி சாஸ்திரி வலியுறுத்தல்
/
துவக்க வீரராக ரோகித் சர்மா: கவாஸ்கர், ரவி சாஸ்திரி வலியுறுத்தல்
துவக்க வீரராக ரோகித் சர்மா: கவாஸ்கர், ரவி சாஸ்திரி வலியுறுத்தல்
துவக்க வீரராக ரோகித் சர்மா: கவாஸ்கர், ரவி சாஸ்திரி வலியுறுத்தல்
ADDED : டிச 09, 2024 11:17 PM

அடிலெய்டு: ''ரோகித் சர்மா மீண்டும் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். 5 அல்லது 6வது இடத்தில் ராகுல் வரலாம்,'' என கவாஸ்கர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இதில் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால்-ராகுல் அசத்தினர். இரண்டாவது இன்னிங்சில், முதல் விக்கெட்டுக்கு 201 ரன் சேர்த்து, வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர். இப்போட்டியில் பங்கேற்காத ரோகித் சர்மா, அடிலெய்டில் நடந்த இரண்டாவது டெஸ்டில் (பகலிரவு, பிங்க் பால்) இடம் பெற்றார். தனது துவக்க இடத்தை ராகுலுக்கு விட்டுக் கொடுத்தார். 6வது இடத்தில் களமிறங்கிய ரோகித் (3,6) சோபிக்கவில்லை. ராகுலும் (37, 7) ஏமாற்ற, இந்திய அணி தோற்றது.
வரும் டிச. 14ல் பிரிஸ்பேனில் துவங்கும் மூன்றாவது டெஸ்டில், ரோகித் சர்மா மீண்டும் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராகுலுக்கு 6வது இடம்: இது குறித்து கவாஸ்கர் கூறுகையில்,''ரோகித் சர்மா இல்லாததால் தான், முதல் டெஸ்டில் துவக்க வீரராக ராகுல் வந்தார். ஜெய்ஸ்வால் உடன் சிறப்பாக விளையாடியதால், இரண்டாவது போட்டியிலும் துவக்க இடத்தில் நீடித்தார். ஆனால், ரன் குவிக்க தவறினார். வரும் போட்டியில் ரோகித் துவக்க வீரராக மீண்டும் களமிறங்க வேண்டும். பேட்டிங் வரிசையில் ராகுல் 5 அல்லது 6வது இடத்தில் வரலாம். துவக்கத்தில் ரோகித் விரைவாக ரன் சேர்த்தால், சதம் அடிக்கவும் வாய்ப்பு உண்டு,''என்றார்.ரவி சாஸ்திரி கூறுகையில்,''ஆறாவது இடத்தில் ரோகித் ஆட்டம் எடுபடவில்லை. உடல் அசைவும் மந்தமாக இருந்தது. துவக்கத்தில் ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். இவருக்கு 'டாப்-ஆர்டர்' தான் பொருத்தமானது. வரும் போட்டிகளில் துவக்க வீரராக துடிப்பாக விளையாட வேண்டும்,''என்றார்.
தொடருமா 'ஆறு'
ரோகித் சர்மா ஆறாவது இடத்தில் தொடர்வதே நல்லது என்ற கருத்தும் உண்டு. 65 டெஸ்டில் 4279 ரன் (சராசரி 41.54) எடுத்துள்ளார். தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 'சேனா' நாடுகளுக்கு எதிராக 46 இன்னிங்சில் 1,247 ரன் (சராசரி 29.7) எடுத்துள்ளார். இதில் துவக்க வீரராக 20 இன்னிங்சில் 680 ரன் (சராசரி 37.8) மட்டுமே எடுத்துள்ளார்.
இது குறித்து பி.சி.சி.ஐ., மூன்றாம் நிலை பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில்,''ரோகித் சர்மாவுக்கு 37 வயதாகிவிட்டது. இவரது உடல் அசைவுகள் வேகமாக இல்லை. கால்களை முன்னோக்கி நகர்த்தி விளையாடுவதில் தடுமாறுகிறார். இந்த பலவீனத்தை அறிந்து எதிரணி வீரர்கள் பந்துவீசுவர். அப்போது 'இன்சைட் எட்ஜ்' ஆகி அவுட்டாக வாய்ப்பு உண்டு. சிவப்புநிற 'கூக்குபரா' பந்துகள் படுவேகமாக வரும். 'புட்வொர்க்' இல்லாமல் தவிக்கும் ரோகித், துவக்கத்தில் வந்தால் புதிய பந்தில் திணற வேண்டியிருக்கும். 6வது இடத்தில் வந்தால், பழைய பந்தை எளிதாக சமாளிக்கலாம். தாக்குதல் பாணியில் விளையாடி விரைவாக ரன் சேர்க்கலாம்,''என்றார்
இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் தேவாங் காந்தி கூறுகையில்,''ரோகித் 'சேனா' நாடுகளுக்கு எதிராக துவக்க வீரராக சோபிக்கவில்லை. இவரை 6வது இடத்தில் களமிறக்குவதே சரியானது.''என்றார்.