/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ருதுராஜின் அனுபவம் புதுமை: கவாஸ்கர் பாராட்டு
/
ருதுராஜின் அனுபவம் புதுமை: கவாஸ்கர் பாராட்டு
ADDED : மார் 23, 2024 11:09 PM

சென்னை: ''கேப்டனாக முதல் போட்டியை ருதுராஜ் வெற்றியுடன் துவக்கியது பாராட்டுக்குரியது,'' என கவாஸ்கர் தெரிவித்தார்.
ஐ.பி.எல்., தொடரின் 17வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் பெங்களூரு அணியை(20 ஓவரில் 173/6), சென்னை அணி(18.4 ஓவர், 176/4) வென்றது. இதில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிமுகமானார். 'தல' தோனி விக்கெட்கீப்பர்/பேட்டராக களமிறங்கினார்.
ருதுராஜ் செயல்பாடு குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:
கேப்டனாக அறிமுகமாகும் போட்டி மிகவும் முக்கியம். வெற்றியுடன் துவக்க வேண்டியது அவசியம். இதனை சரியாக செய்தார் ருதுராஜ். சென்னை அணிக்கு எளிதான வெற்றி தேடித் தந்தார். முஸ்தபிஜுர், தீபக் சகார், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட பவுலர்களை சூழ்நிலைக்கு ஏற்ப அருமையாக பயன்படுத்தினார். 18வது ஓவரை வீசிய தேஷ்பாண்டே 25 ரன்களை வாரி வழங்கினார். கடைசி ஓவரை வீச வேறு ஒருவரை அழைத்திருக்கலாம். ஆனால், தேஷ்பாண்டே மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். அவரும் கடைசி ஓவரை கலக்கலாக வீசி, 9 ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார். இந்த இடத்தில் கேப்டனாக முத்திரை பதித்தார் ருதுராஜ். இவருக்கு வழிகாட்ட தோனியும் உடன் இருந்தார்.
பெங்களூருவை பொறுத்தவரை பவுலிங்கில் சொதப்பியது. அல்ஜாரி ஜோசப், சிராஜ் போன்றோர் வீணாக பவுன்சர் வீசினர். துல்லியமாக பவுன்சர் வீச தவறினால், 'வைடு' உட்பட உதிரி ரன் விட்டுக் கொடுக்க நேரிடும். 'ஸ்பின்னர்' மயாங்க் டாகர் 2 ஓவரில் 6 ரன் தான் கொடுத்தார். இவருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.
சேவக் குறும்பு
கேப்டனாக ருதுராஜ் இருந்த போதும், 'பீல்டிங்' வியூகங்களை தோனியே வகுத்தார். இதனால் 'டிவி' கேமராக்கள் அடிக்கடி தோனியை காட்டின. இது குறித்து வர்ணனையாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் சேவக் கூறுகையில்,'' தோனியின் முகத்தை மட்டுமே கேமராமேன் காண்பிக்கிறார். பிரதர், ப்ளீஸ் ருதுராஜ் முகத்தையும் கொஞ்சம் காண்பியுங்கள். அவர் தான் இப்போது சென்னை அணியின் கேப்டன்,''என ஜாலியாக குறிப்பிட்டார்.
'ஷாக்' ஆயிட்டேன்...
ஷிவம் துபே, 28 பந்தில் 34 ரன் விளாசி சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவர் கூறுகையில்,''கடைசி கட்டத்தில் வெற்றிகரமாக 'பினிஷிங்' செய்யும் திறமையை தோனியிடம் கற்றேன். இவர், கேப்டன் பதவியில் இருந்து விலகியதை கேட்டு 'ஷாக்' ஆனேன். சரியான நபரிடம் தான் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். தோனியை போல ருதுராஜும் 'கூல்' கேப்டன் தான். எதற்கும் பதட்டப்படமாட்டார்,'' என்றார்.
தோனி சின்ன 'பிரேக்'
வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ல் கூறுகையில்,''ஐ.பி.எல்., தொடரில் இம்முறை அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாட வாய்ப்பு இல்லை. ஒரு சின்ன 'பிரேக்' எடுக்கலாம். இதனால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார்,''என்றார்.
முடியுமா...
சென்னை அணிக்கு 5 முறை கோப்பை வென்று தந்தவர் தோனி. இவரை போல புதிய கேப்டன் ருதுராஜ் சாதிக்க முடியுமா என இணையதளம் ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியது. சுமார் 5,000 பேர் பங்கேற்றனர். 'முடியாது' என 51.06, 'முடியும்' என 35.71, 'தெரியாது' என 13.23 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்

