/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
சூர்யகுமார் செய்த தியாகம்: திலக் வர்மா பெருமிதம்
/
சூர்யகுமார் செய்த தியாகம்: திலக் வர்மா பெருமிதம்
ADDED : நவ 14, 2024 10:59 PM

செஞ்சுரியன்: ''மூன்றாவது இடத்தில் களமிறங்க சூர்யகுமார் வாய்ப்பு கொடுத்தார். இதன் காரணமாக சதம் விளாசினேன்,''என திலக் வர்மா தெரிவித்தார்.
செஞ்சுரியனில் நடந்த மூன்றாவது 'டி-20' போட்டியில் தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சிதறடித்த திலக் வர்மா, 51 பந்தில் சதம் விளாசி, இந்திய வெற்றிக்கு கைகொடுத்தார். கடந்த இரு போட்டிகளில் நான்காவது இடத்தில் வந்த இவர், 33, 20 ரன் தான் எடுத்தார். அடுத்த போட்டியில் மூன்றாவது இடத்தில் களமிறங்க விரும்பினார். இந்த இடத்தில் கேப்டன் சூர்யகுமார் வருவது வழக்கம். இருப்பினும் திலக் வர்மாவுக்காக தியாகம் செய்தார். திலக் சதம் விளாசினார். நான்காவது இடத்தில் வந்த சூர்யகுமார் ஒரு ரன் தான் எடுத்தார்.
சூர்யகுமார் கூறுகையில்,''இரண்டாவது போட்டி முடிந்ததும், எனது அறைக்கு வந்த திலக் வர்மா, பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக களமிறங்க வாய்ப்பு தரும்படி கேட்டார். இதை ஏற்றுக் கொண்டேன். களத்தில் திறமை வெளிப்படுத்தும்படி அறிவுறுத்தினேன். இதற்கு ஏற்ப சதம் விளாசியது மகிழ்ச்சி அளிக்கிறது,''என்றார்.
'ஆல்-ரவுண்டர்' ஆசைதிலக் வர்மா கூறுகையில்,''மூன்றாவது இடத்தில் களமிறங்க சூர்யகுமார் வாய்ப்பு கொடுத்ததால் தான், சதம் விளாச முடிந்தது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம்பாப்வே, இலங்கைக்கு எதிராக தொடரில் விளையாட முடியவில்லை. காயத்தில் இருந்து குணமடையும் வரை, பொறுமையாக காத்திருந்தேன். தற்போது சதம் விளாசியது திருப்தியாக உள்ளது. பந்துவீச்சிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன். 'ஆல்-ரவுண்டராக' அசத்த வேண்டும் என்பதே இலக்கு,''என்றார்.
தொடரும் 3வது இடம்ஐதராபாத்தை சேர்ந்த இளம் இடது கை பேட்டர் திலக் வர்மா 22. ஐ.பி.எல்., தொடரில் சூர்யகுமார் உடன் மும்பை அணிக்காக விளையாடுகிறார். 2022ல் இவரை ரூ. 1.7 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. தற்போது ரூ. 8 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். வரும் ஐ.பி.எல்., தொடரிலும் திலக் வர்மா, மூன்றாவது இடத்தில் களமிறங்கலாம்.

