தோனி 'அட்வைஸ்'... ரிஸ்வி 'சர்ப்ரைஸ்' * சென்னை அணி உற்சாகம்
தோனி 'அட்வைஸ்'... ரிஸ்வி 'சர்ப்ரைஸ்' * சென்னை அணி உற்சாகம்
ADDED : மார் 27, 2024 10:52 PM

சென்னை: ''தோனி கொடுத்த 'அட்வைஸ்' தான் சிறப்பாக செயல்பட காரணம்,'' என சென்னை வீரர் சமீர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல்., ஏலத்தில் சென்னை அணிக்காக ரூ. 8.4 கோடிக்கு வாங்கப்பட்டவர் உ.பி., வீரர் சமீர் ரிஸ்வி 20. நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மிரட்டினார். வந்த வேகத்தில் உலகின் முன்னணி ஸ்பின்னரான ரஷித் கான் பந்தை சிக்சருக்கு அனுப்பி 'சர்ப்ரைஸ்' கொடுத்தார்.
இதுகுறித்து சமீர் ரிஸ்வி கூறியது:
சென்னை அணிக்காக ஏலத்தில் தேர்வு செய்யப்பட்ட போது மகிழ்ச்சி அடைந்தேன். தோனியை சந்திப்பது எனது கனவாக இருந்தது. அவருடன் விளையாடுவதை நினைத்து கூட பார்த்தது இல்லை. தற்போது கனவு நனவாகியுள்ளது. இவருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டேன். இவரிடம் இருந்து நிறைய கற்று வருகிறேன்.
தோனியை பொறுத்தவரை,' வழக்கமாக விளையாடும் ஸ்டைலில் விளையாடு, திறமை எப்போதும் போலத் தான் இருக்கும். மனநிலை வேண்டுமானால் மாறலாம். மற்றபடி எவ்வித வித்தியாசமும் இல்லை. மைதானத்தில் ஏற்படும் நெருக்கடியை கண்டு கொள்ளாமல், சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும்,' என 'அட்வைஸ்' செய்தார்.
இதனால் தான் முதல் பந்தில் சிக்சர் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் ஏற்பட்டது. உள்ளூர் போட்டிகளில் எனது ஜெர்சி எண் 7. தற்போது இதை தோனி அணிகிறார். இதனால் 1ம் நம்பர் பொறித்த ஜெர்சியை அணிகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹசி வியப்பு
சென்னை பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி கூறுகையில்,'' ரிஸ்வி சந்தித்த முதல் பந்தில், 'டி-20' அரங்கின் சிறந்த பவுலர் (ரஷித் கான்) பந்தில் சிக்சர் அடித்தது பெரிய விஷயம். சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளாசும் திறன் இவருக்கு இயற்கையாகவே உள்ளது,'' என்றார்.
சபாஷ் துபே
குஜராத் அணிக்கு எதிராக 23 பந்தில் 51 ரன் (5 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்தார் ஷிவம் துபே 30. இவர் குறித்து ஹசி கூறுகையில்,'' சில ஆண்டுக்கு முன் 'பவுன்சர்' வீசினால், பந்தை அடிக்காமல், துபே குனிந்து விடுவார் அல்லது தற்காப்பு முறையில் விளையாடுவார். இதற்காக தோனி தனிப்பட்ட முறையில் ஆலோசனை தந்து துபேவை மாற்றியுள்ளார்,'' என்றார்.
சுப்மனுக்கு அபராதம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி, 63 ரன்னில் குஜராத்தை வீழ்த்தியது. இப்போட்டியில் குஜராத் அணியினர் நிர்ணயித்த நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இதையடுத்து முதன் முறையாக விதி மீறியதால் குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஷமி இல்லாமல்...
குஜராத் அணி 2022ல் முதல் கோப்பை வென்றதற்கு முகமது ஷமியின் வேகப்பந்து வீச்சு உதவியது. இம்முறை ஆப்பரேஷன் செய்ததால் ஷமி விலகினார். இது குஜராத் பவுலிங்கை பெரிதும் பாதித்துள்ளது. குஜராத் பவுலர் மோகித் சர்மா கூறுகையில்,''ஷமி போன்ற பவுலருக்கு யாரும் மாற்றாக முடியாது. இவர் இல்லாத போட்டிகளை எப்படி கடந்து செல்வது என்று தான் திட்டமிட வேண்டும்,'' என்றார்.
