/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வெல்லட்டும் ‛வேக' கூட்டணி... ஷமி நம்பிக்கை
/
வெல்லட்டும் ‛வேக' கூட்டணி... ஷமி நம்பிக்கை
UPDATED : பிப் 09, 2024 11:04 PM
ADDED : பிப் 09, 2024 10:59 PM

புதுடில்லி: ''இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணியின் வெற்றிநடை இன்னும் பல ஆண்டுகள் தொடரும்,'' என முகமது ஷமி தெரிவித்தார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 33. சமீபத்தில் முடிந்த உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் (24) வீழ்த்திய பவுலர்களில் முதலிடம் பிடித்தார். ஷமி கூறியது:
பொதுவாக எனக்கென எவ்வித இலக்கும் வைத்துக் கொள்வதில்லை. ஆடுகளம், சூழலுக்கு ஏற்ப எனது திட்டத்தை மாற்றிக் கொண்டு செயல்படுவேன், அவ்வளவு தான். கடந்த 7, 8 ஆண்டுகளில் கடினமாக முயற்சி செய்துள்ளேன். இது எனக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது.
சமீபத்திய உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட இதுதான் காரணமாக அமைந்தது. அதேபோல அணியில் ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு, நம்பிக்கை வைத்து செயல்பட்டதால் தான் இந்திய 'வேகப்பந்து' கூட்டணி வலுவானதாக மாறியது. இது இன்னும் பல ஆண்டுகளுக்கு வெற்றிகரமாக தொடரும் என நம்புகிறேன். தவிர பல புதிய 'வேகங்கள்' உருவாக வேண்டும்.
இந்திய ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவது அரிதாகவே நடக்கும். தற்போது நிலைமை மாறி விட்டது. எங்களைப் போன்ற பவுலர்களும் அசத்துகின்றனர்.
சமீபத்திய உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து ஐந்தாவது ஓவர் பந்து வீசினேன். சோர்வாக இருந்தேன். 5வது விக்கெட் சாய்த்ததும், அப்படியே முழங்காலிட்டு அமர்ந்தேன். பின்னால் இருந்து யாரோ லேசாக தள்ள, முன்னோக்கி குனிந்தேன், அவ்வளவு தான். உடனே இதுகுறித்து தவறான செய்தி பரப்பி விட்டனர். தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்.
'ஜெய் ஸ்ரீராம்'
அனைத்து மதத்திலும், மாற்று மதத்தினரை விரும்பாத சிலர் இருப்பர். ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால், 'ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்வதில் என்ன பிரச்னை உள்ளது. ஆயிரம் முறை கூட சொல்லலாம். அதேபோல நான் 'அல்லா ஹூ அக்பர்' என சொல்ல வேண்டும் என்றால், அதையும் ஆயிரம் முறை சொல்வேன். என்ன வித்தியாசம் உள்ளது. இதில் தவறு எதுவும் இல்லை. மக்கள் தங்களுக்கு பிடித்த கோஷங்களை எழுப்புவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

