ADDED : பிப் 09, 2024 10:22 PM

புதுடில்லி: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து காயம் காரணமாக ஸ்ரேயாஸ் நீக்கப்பட உள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் சம நிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் பிப். 15ல் ராஜ்கோட்டில் துவங்க உள்ளது.
இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முதல் இரு டெஸ்டில் 'சீனியர்' கோலி பங்கேற்கவில்லை. காயம் காரணமாக ஜடேஜா, ராகுல் இரண்டாவது டெஸ்டில் இடம் பெறவில்லை. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட உள்ளது.
கோலி அணிக்கு திரும்புவது குறித்து இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் அணியை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. ராகுல் அணியில் இடம் பெறலாம். கடந்த ஆண்டு முதுகுப்பகுதியில் ஆப்பரேஷன் செய்து மீண்டு வந்த ஸ்ரேயாஸ் 29, முதல் இரு டெஸ்டில் சிறப்பான துவக்கம் கண்ட போதும் பெரியளவு ஸ்கோர் (35, 13, 27, 29 ரன்) அடிக்காமல் ஏமாற்றம் தந்தார்.
தவிர மீண்டும் முதுகு வலி, தொடை காயத்தால் அவதிப்படுகிறார். இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து ஸ்ரேயாஸ் நீக்கப்பட வாய்ப்புள்ளது. இவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று, காயத்தில் இருந்து மீண்டு வர தேவையான பயிற்சியில் ஈடுபட உள்ளார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள், நாளை ராஜ்கோட் வந்து, மூன்று நாள் பயிற்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். அபுதாபி சென்றுள்ள இங்கிலாந்து அணியினர் பிப். 12ல் இந்தியா வருகின்றனர்.
